Congress: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை முடிவு செய்ய, காங்கிரசின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024:


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வரும் பாஜக, பல மாநிலங்களில் கூட்டணியை இறுதி செய்துள்ளது. முதற்கட்டமாக 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.


காங்கிரசும் - I.N.D.I.A. கூட்டணியும்:


மறுமுனையில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒன்று சேர்ந்த I.N.D.I.A. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை நிலவுகிறது. மேலும் சில மாநிலங்களில் இழுபறியான சூழல் உள்ளது. இதனால், வேட்பாளர்கள் தொடர்பான அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. அதேநேரம், அடுத்த ஒரு சில தினங்களில் காங்கிரசின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான்,  நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை முடிவு செய்ய, காங்கிரசின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.


முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்:


காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் குறிப்பிட்ட தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு, முதற்கட்டமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில், ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரின் பெயரும் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


ராகுல் காந்தி மீண்டும் அமேதியில் போட்டி?


தற்போது வரை வெளியாகியுள்ள தகவலின்படி, உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. 2004ம் ஆண்டு முதல்முறையாக அங்கு போட்டியிட்டு வென்றவர், தொடர்ந்து 2009, 2014 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடினார். ஆனால், 2019ம் ஆண்டு பாஜகவின் வேட்பாளரான ஸ்மிருதி இராணியிடம், அமேதியில் ராகுல் காந்தி தோல்வியை தழுவினார். இந்நிலையில் தான், எதிர்வரும் தேர்தலில் மீண்டும் ராகுல் காந்தி அந்த தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவார் என்று அம்மாவட்ட மாவட்ட காங்கிரஸ் தலைவரே பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, முதன்முறையாக தேர்தல் களத்திற்கு வரும் பிரியங்கா காந்தி, உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடக் கூடும் என கூறப்படுகிறது. அந்த தொகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.