காங்கிரஸ் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்த அக்கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபல்(Kapil Sibal) காங்கிரஸில் இருந்து விலகி, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


காங்கிரஸ் மீது அதிருப்தி:


காங்கிரஸ் கட்சி தலைமையின் மீது அதிருப்தியில் இருந்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அதிருப்தி தலைவர்கள் ஜி-23 தலைவர்கள் என்று அழைக்கப்பட்டனர். இந்த அதிருப்தி தலைவர்களில் முக்கியமானவராக இருந்தவர் கபில் சிபல், காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் பல்வேறு துறைகளின் அமைச்சராக இருந்திருக்கிறார்.


இந்த நிலையில், 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது காங்கிரஸ் தலைமை. இந்த கூட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆனால், காங்கிரஸ் தலைமை கபில் சிபலை தொடர்ந்து புறக்கணித்து வந்த நிலையில் அவர் கடும் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.


கபில் சில்


தேர்தலையொட்டி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் நடத்தும் 3500 கிலோ மீட்டர் “பாரத் ஜோதோ யாத்ரா”வை ஒருங்கிணைக்கவும், தேர்தல் பணிக்குழு, அரசியல் விவகாரக்குழு என்று மூன்று குழுக்களை அமைத்து காங்கிரஸ் தலைமை நேற்று உத்தரவிட்டது. அந்த குழுவில், ஜி23 ஐச் சேர்ந்த குலாம்நபி ஆசாத்,  சசி தரூர்,  முகுல் வாஸ்னிக், ஆனந்த் ஷர்மா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர். இவர்களோடு ப.சிதம்பரம், ஜோதிமணி உள்ளிட்டோரும் அந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். ஆனால், கபில் சிபல் இந்த குழுவில் சேர்க்கப்படவில்லை.


இதனால் கடும் அதிருப்தியடைந்த கபில் சிபல் கட்சியில் இருந்து விலக முடிவெடுத்துவிட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியதோடு, வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கு சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு மனுத்தாக்கலும் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 2016ம் ஆண்டு உத்தரபிரதேசத்திலிருந்து காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி உதவியுடன் மாநிலங்களவை எம்பியான கபில் சிபலின் பதவிகாலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. ஆனால் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட உத்தரபிரதேசத்தில் 2 எம்எல்ஏக்கள் மட்டுமே காங்கிரஸ் வைத்திருக்கும் நிலையில் காங்கிரஸ் சார்பில் அவர் மீண்டும் எம்பியாக முடியாத நிலை உருவானது. இதனையடுத்து காங்கிரஸில் இருந்து விலகிய கபில் சிபல் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடுகிறார். சாந்தினி சவுக்கில் ஸ்மிருதி ராணியைத் தோற்கடித்து எம்பியான கபில் சிபல் தற்போது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பிலோ அல்லது உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் சார்பிலோ போட்டியிட்டு எம்பி ஆவார் என்று கூறப்பட்ட நிலையில், அவருக்கு சமாஜ்வாதி கட்சி தனது ஆதரவை வழங்கியுள்ளது. எனினும், அவர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துவிட்டது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.


காங்கிரஸின்  முகமாகக் கருதப்பட்ட கேப்டன் அம்ரீந்தர் சிங் கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகிவிட்ட நிலையில், தற்போது கபில் சிபல் விலகியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.