முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 6 கொலையாளிகளை விடுதலை செய்வதற்கான முடிவை உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ள நிலையில், இந்த தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது என்றும், ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் காங்கிரஸ் எதிர்வினை ஆற்றியுள்ளது.


உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு குறித்து காங்கிரஸ் எம்.பி.யும், அக்கட்சியின் தகவல் தொடர்பு பிரிவின் பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. முற்றிலும் தவறானது. 


இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இந்தியாவின் உணர்வோடு ஒத்துப்போகாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது" என குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகளை விடுவித்தது மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்










இதை தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் அபிஷேக் மனு சிங்வி கலந்து கொண்டார். சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரின் நிலைபாட்டில் இருந்து காங்கிரஸ் ஏன் வேறுபட்டுள்ளது? என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதில் அளித்த அவர், "தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்க சோனியா காந்திக்கு உரிமை உண்டு. ஆனால் மிகுந்த மரியாதையுடன், கட்சி அதை ஏற்று கொள்ளவில்லை. எங்கள் கருத்தை தெளிவாகக் கூறியுள்ளோம்.


ராஜீவ் காந்தியின் படுகொலை மற்ற குற்றம் போல் அல்ல. இது ஒரு தேசிய பிரச்சினை, உள்ளூர் கொலை அல்ல. எங்களைப் பொறுத்தவரை, இறையாண்மை, ஒருமைப்பாடு, தேசத்தின் அடையாளம் ஆகியவற்றுக்கும் முன்னாள் பிரதமரின் படுகொலைக்கும் தொடர்பு உள்ளது. அதனால்தான், இந்த விஷயத்தில் மாநில அரசின் கருத்தை மத்திய அரசு ஒருபோதும் ஏற்கவில்லை" என்றார்.


கடந்த 1991ஆம் ஆண்டு, மே 21ஆம் தேதி, தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில், அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பெண் தற்கொலை குண்டுதாரியால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.


இந்த கொலை தொடர்பான வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்பட 6 பேரைதான் உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
படுகொலை சம்பவம் தொடர்பாக நளினி, முருகன், சாந்தனு, பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 1991ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.


கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில் கடந்த மே மாதம் 18ஆம் தேதி பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.


இதையடுத்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனித்தனியே மனுத்தாக்கல் செய்திருந்தனர்.


இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரறிவாளன் வழக்கில் அவருக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும் என்று தெரிவித்தது.


அரசியல் சட்டத்தின் 161வது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது.


தமிழ்நாடு அரசு பரிந்துரைத்த போதிலும் இந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வந்தார். இந்த சூழலில், உச்சநீதிமன்றம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இன்று 6 பேரையும் விடுதலை செய்து அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.