காங்கிரஸ் கட்சியில் இதுவரை இருந்த காரிய கமிட்டிக்கு பதிலாக வழிகாட்டுதல் குழுவை உருவாக்கி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உத்தரவிட்டுள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்ட 47 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை நியமித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பான காங்கிரஸின் காரியக் கமிட்டிக்கு பதிலாக இந்த குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்து நடைபெற இருக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் புதிய செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






அதேபோல் இந்த குழுவில், ராஜ்ய சபா எம்.பியான பா. சிதம்பரம் மற்றும் லோக் சபா  எம்.பியான மாணிக்க தாகூரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். மேலும், ஏ.கே. ஆண்டனி, ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சுர்ஜேவாலா, அம்பிகா சோனி, அஜய் மக்கன், ஹரிஷ் ராவத், அபிஷேக் மனு சிங்வி போன்ற முன்னணி தலைவர்களும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். குழுவில் ஜி-23 இன் ஒரு பகுதியாக இருக்கும் ஆனந்த் சர்மாவும் இடம்பெற்றுள்ளார்.


காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கேவை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூருக்கு வழிநடத்தல் குழுவில் இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.