கர்நாடகாவில் மே மாதம் 10ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான முடிவுகள், மே 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், முக்கிய கட்சியை சேர்ந்த தலைவர்கள் தவீர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


"பிரதமர் மோடி விஷ பாம்பை போன்றவர்"


இந்த சூழ்நிலையில், கல்புர்கியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை விஷ பாம்புடன் ஒப்பிட்டார். "பிரதமர் மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர். அது விஷமா இல்லையா என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் அதை நக்கினால், நீங்கள் இறந்துவிடுவீர்கள்" என கார்கே குறிப்பிட்டார்.


கார்கேவின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த கருத்துக்கு கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


விஷ பாம்பு குறித்த கார்கேவின் கருத்துக்கு பதிலடி தந்த கர்நாடக முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பசவராஜ் பொம்மை, "கார்கேவின் மனதில் ஒரு விஷம் இருக்கிறது. இது பிரதமர் மோடி மற்றும் பாஜக மீதான பாரபட்சமான எண்ணம். அரசியல் ரீதியாக அவருடன் சண்டையிட முடியாமல், தங்கள் கப்பல் மூழ்குவதைக் கண்டு, விரக்தியில் தான் இந்த மாதிரியான சிந்தனை வருகிறது. மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்" என்றார்.


"சோனியா காந்தி சொன்னதை விட மோசம்"


கடும் எதிர்ப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், "காங்கிரஸ் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் தலைவரின் கருத்து சோனியா காந்தி சொன்னதை விட மோசமானது" என்றார். மோடியை மரணத்தின் வியாபாரி என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி அனுராக் தாகூர் இப்படி பேசியுள்ளார்.


"கார்கே, தனது அரசியல் எஜமானர்களை திருப்திப்படுத்த இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்" என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விமர்சித்திருந்தார்.


கார்கேவை கடுமையாக சாடிய மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, "மல்லிகார்ஜுன் கார்கே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். தற்போது, கட்சியின் தலைவராக உள்ளார். அவர் உலகிற்கு என்ன சொல்ல விரும்புகிறார்? பிரதமர் நரேந்திர மோடி நம் நாட்டின் பிரதமர், உலகம் முழுவதும் அவரை மதிக்கிறது.


கார்கே விளக்கம்:


பிரதமருக்காக இதுபோன்ற மொழியைப் பயன்படுத்துவது காங்கிரஸ் எந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. அவர் (கார்கே) நாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்றார்.


தொடர் சர்ச்சைக்கு மத்தியில், தனது கருத்து குறித்து விளக்கம் அளித்த கார்கே, "பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் ஒருபோதும் பேசவில்லை. அவர்களின் (பாஜக) சித்தாந்தம் பாம்பு போன்றது. அதைத் தொட முயன்றால் உங்கள் மரணம் நிச்சயம் என்றே சொன்னேன்" என கூறினார்.


விளக்கம் அளித்த பிறகும் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்ப தன் கருத்துக்கு கார்கே வருத்தம் தெரிவித்துள்ளார். "எனது கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால், அது தவறாகக் கருதப்பட்டு யாரையாவது துன்புறுத்தியிருந்தால், அதற்காக நான் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவர் கூறினார்.