கூட்டு வங்கி கணக்கை (joint bank account) தொடங்குவது, காப்பீட்டுக் திட்டங்களில் இணையரை நியமிப்பது போன்ற அடிப்படை சமூக உரிமைகளை தன்பாலின தம்பதிகளுக்கு வழங்க அரசு வழியை கண்டுபிடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. 


நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நிலுவையில் உள்ளன. ஆனால், தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மறுத்து வருகிறது.


தன்பாலின தம்பதிகளால் எப்படி சமூக நலன்களைப் பெற முடியும்?


இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை 6ஆவது நாளாக இன்று தொடர்ந்தது. திருமணம் செய்வதற்கான உரிமையை மறுப்பது தங்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் செயல் என்றும் பாகுபாடு மற்றும் சமூக விலக்கலுக்கு வழிவகுக்கும் என்றும் தனிபாலின தம்பதிகள் வாதம் முன்வைத்தனர்.


அப்போது, அடிப்படை சமூக உரிமைகளை தன்பாலின தம்பதிகளுக்கு வழங்க அரசு வழியை கண்டுபிடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. தன்பாலின தம்பதிகளுக்கு திருமண அந்தஸ்து வழங்காமல், இந்த பிரச்னைகளில் சிலவற்றை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதை அரசு ஆராய வேண்டும் என  உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டது.


பாயிண்டை பிடித்த உச்ச நீதிமன்றம்:


இதற்கான பதிலை, வரும் புதன்கிழமை அளிக்கமாறு மத்திய அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரலை உச்ச நீதிமன்றம் கேட்டு கொண்டது.


தொடர்ந்து பேசிய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்குவது சட்டமன்றத்தின் வேலை என நீங்கள் சொல்கிறீர்கள். அதை ஏற்று கொள்கிறோம். ஆனால், தன்பாலின உறவில் அரசு என்ன செய்ய விரும்புகிறது? அவர்களுக்கு பாதுகாப்பு உணர்வு மற்றும் சமூக நலன்களை எப்படி வழங்க முடியும்? அத்தகைய உறவுகள் புறக்கணிக்கப்படுவதில்லை என்பது உறுதிப்படுத்தப்படுமா?" என கேள்வி எழுப்பினார்.


மத்திய சட்ட அமைச்சர் கருத்து:


தன்பாலின திருமண விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டியது நாடாளுமன்றமே தவிர, நீதிமன்றமல்ல என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று கூறியிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.


நேற்றைய விசாரணையில், "நீதிமன்றம் ஒரு மிகவும் சிக்கலான விஷயத்தை கையாள்கிறது. இது ஆழ்ந்த சமூக தாக்கத்தை கொண்டுள்ளது. உண்மையான கேள்வி என்னவென்றால், திருமணம் என்றால் என்ன, யாருக்கு இடையே நடக்க வேண்டும் என்பதுதான்.


சமூகத்திலும் மாநிலங்கள் இயற்றிய சட்டங்களிலும் இதனால் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விவாதம் தேவைப்படுகிறது" என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்திருந்தார்.