தெலங்கானாவில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு, தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட முதல் தேர்தலில் கே. சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (கட்சியின் பெயர் பாரத் ராஷ்டிரிய சமிதி என மாற்றப்பட்டுள்ளது) வெற்றி பெற்றது.
இதையடுத்து, அங்கு ஆட்சியை கைப்பற்ற பாஜக தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தலைநககர் ஹைதராபாத்தை பாக்கியநகர் என பிரதமர் மோடி குறிப்பிட்டது பெரும் பேசுபொருளாக மாறியது. அதேபோல, சந்திரசேகர ராவ், குடும்ப அரசியலில் ஈடுபடுவதாக பாஜக தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
தெலங்கானா அரசியல்:
இதற்கிடையே, பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக பேரம் பேசியதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழலில், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் கூட, ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர்கள், காங்கிரஸ் கட்சியில் இணைந்தது தெலங்கானா அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், ஹைதராபாத் செவெல்லாவில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "காங்கிரஸ் கட்சி 53 ஆண்டுகளில் என்ன செய்தது? என உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கடி கேட்கிறார்.
அமித் ஷாவுக்கு லிஸ்ட் போட்டு பதில் சொன்ன மல்லிகார்ஜுன கார்கே:
சுதந்திரத்திற்கு பிறகு 562 சமஸ்தானங்களை இந்தியாவுடன் ஒருங்கிணைத்தது காங்கிரஸ் கட்சி. சர்தார் படேல் இந்தியாவை ஒற்றுமைப் படுத்தினார். அம்பேத்கர் மற்றும் காங்கிரஸ் கட்சி, நாட்டிற்கு அரசியலமைப்பை வழங்கினோம். IIT, IIM, AIIMS, ISRO, DRDO, HAL, BEL, ONGC, SAIL உள்ளிட்ட அத்தனை அரசு நிறுவனங்களும் இந்தியாவுக்கு நேரு மற்றும் காங்கிரஸ் வழங்கிய பரிசுகள்தான்" என்றார்.
பாரத் ராஷ்டிரிய சமிதியை விமர்சித்து பேசிய கார்கே, "நாங்கள் (இந்தியா கூட்டணி) அனைவரும், 26 கட்சிகள் இணைந்து, மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசை அகற்ற தயாராக இருக்கிறோம். ஆனால், இந்த கே.சி.ஆர்., ஒரு கூட்டத்தில் கூட கலந்து கொள்ளவில்லை. பாஜகவை ஒழிக்க மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டும் என்று அவர் கூறவில்லை.
இங்கே அவர்கள் (பிஆர்எஸ்) தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், மறுபுறம், அவர்களுடன் (பாஜக) விஷயங்களை விவாதிக்கிறார்கள். பிஆர்எஸ் மற்றும் பிஜேபி இப்போது நண்பர்களாகிவிட்டன. இவர்கள், அதைப் பற்றி பேச மறுக்கிறார்கள். இனி, அவர்கள் இங்கே ஒருவருக்கொருவர் எதிராக பேசுவதை நிறுத்துவார்கள்.
ஆனால் நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம். அனைவரையும் பாட்னாவில் சந்திக்க வைத்தோம். பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் டெல்லியில் சந்தித்தனர். இப்போது, மும்பையிலும் சந்திப்போம். பா.ஜ.க.வை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு, கே.சி.ஆர் போன்ற அதன் ஆதரவாளர்களை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பதே இதன் நோக்கம்" என்றார்.