கர்நாடகாவில் மே மாதம் 10ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான முடிவுகள், மே 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டது. கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
"மத நல்லிணக்கத்தை கெடுக்க முயற்சி"
இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், "தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகாவில் பொதுக்கூட்டங்களின்போது, உணர்வுகளை தூண்டும் விதமாகவும் பகைமையை ஊக்குவிக்கும் வகையிலும் வெறுப்பை பரப்பும் நோக்கிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
"அமித் ஷாவின் பேச்சு அதிர்ச்சியூட்டும் வகையிலும் இந்திய தேசிய காங்கிரஸின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் விதமாகவும் கூடியிருந்த கூட்டத்தினரிடையே மத நல்லிணக்கச் சூழலை கெடுக்க முயல்வதை நோக்கமாகக் கொண்டது" என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, டாக்டர் பரமேஸ்வர், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவக்குமார் ஆகியோர், இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர்.
அமித் ஷாவுக்கு எதிராக பறந்த புகார்:
காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே. சிவக்குமார், "காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வகுப்புவாத கலவரம் ஏற்படும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் எப்படி இதைச் சொல்ல முடியும்? இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்.
முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், இப்படி வெறுப்பு பேச்சில் ஈடுபடுவது ஒன்றும் முதல்முறை அல்ல. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அனுராக் தாகூர், பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டோர் வெறுப்பை தூண்டியதாக குற்றச்சாட்டு உள்ளது.
பாஜகவை பொறுத்தவரையில், தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில், பிரதமர் மோடியின் செல்வாக்கை அதிகமாக நம்பியுள்ளது பாஜக. இதன் காரணமாக, தேர்தலுக்கு முன்னதாக 20க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி. இவர் மட்டும் இன்றி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை நட்சத்திர பிரச்சாரகர்களாக பாஜக களம் இறக்கியுள்ளது.
முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் அதிக எண்ணிக்கையில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என மாநில பாஜக தலைமை கேட்டு கொண்டுள்ளது. அதேபோல, ஆட்சியை பிடிக்க ஊழல் விவகாரத்தையும் இடஒதுக்கீட்டையும் கையில் எடுத்துள்ளது காங்கிரஸ். வேட்பாளர் தேர்வில் இரண்டு கட்சிகளும் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.