பெண்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் மற்றும் இலவச பஸ் பயணம், சாதிவாரி கணக்கெடுப்பு என மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் பல வாக்குறுதிகளை அளித்துள்ளது.
மக்களவை தேர்தலை தொடர்ந்து அடுத்தடுத்து சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணியும் ஹரியானாவில் பாஜகவும் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்தபடியாக, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
மெகா திட்டம்:
ஜார்க்கண்டில் இரண்டு கட்டமாக நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதியும் மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில் நடைபெற உள்ள தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக கூட்டணியும் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து மக்களவை தேர்தலில் பெற்ற வெற்றியை தொடரவும் காங்கிரஸ் கூட்டணி முயற்சி செய்து வருகிறது. ஒருபுறம் பாஜக கூட்டணியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது.
அதற்கு எதிராக காங்கிரஸ் கூட்டணியில் உத்தவ் தாக்கரே சிவசேனாவும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
பெண்களுக்கு அள்ளிக்கொடுக்கும் காங்கிரஸ்:
கர்நாடக, தெலங்கானா மாநிலங்களில் பின்பற்றிய அதே பார்முலாவை மகாராஷ்டிராவில் கையில் எடுத்துள்ளது காங்கிரஸ். அதன்படி, காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் போன்று அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளது. ஒரு குடும்பத்திற்கு 15 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என காங்கிரஸ் கூறியுள்ளது.
இதை தவிர, மக்களவை தேர்தலில் அறிவித்தது போல், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 3 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.