உத்திரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தங்களது கட்சியின் வேட்பாளராக உன்னாவ் பகுதியில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் தாயை அந்தப் பகுதியின் பங்கர்மாவ் தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி களமிறக்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதரா வெளியிட்டுள்ளார்.


கடந்த 2017ல் உன்னாவ் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் என்பவர் 19 வயதுப் பெண் ஒருவரை பாலியன் வன்புணர்வு செய்த காரணத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்டு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குல்தீப்பின் ஆட்கள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் தந்தையை தாக்கியதில் காயம் காரணமாக அவர் அடுத்த தினமே உயிரிழந்தார். தன் தந்தைத் தாக்கப்பட்டதை அறிந்த அந்தப் பெண் தற்கொலை செய்துகொள்ள முயன்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்துதான் பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குல்தீப் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. தற்போது குல்தீப் சிங் பதவிவகித்த அதே தொகுதியில்தான் காங்கிரஸ் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் தாயை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. 




"வன்முறை மற்றும் தாக்குதலுக்கு ஆளானவர் என்றால் உங்களுக்காக காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்கிற வலுவான செய்தியை இதன்மூலம் நாங்கள் எடுத்துரைக்க விரும்புகிறோம்" என பிரியங்கா கூறியுள்ளார். இதே பகுதியில்தான் அவர் ‘லட்கி ஹூன்,லட் சக்தி ஹூன்’ என்கிற பரப்புரைப் பயணத்தையும் அவர் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 40 சதவிகிதத் தொகுதிகளில் இந்த முறை பெண்களை களமிறக்கியுள்ளது.


’எங்களது பரப்புரை தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் முன்னேற்றத்துக்கானது. அதில் வெறுப்பரசியல் இருக்காது. எங்களது நோக்கம் கட்சியை வலுப்படுத்துவது. எங்கள் வேட்பாளர்களை மக்கள் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்க வைப்பது’ என்றும் அவர் கூறியுள்ளார்.


உத்திரப்பிரதேசத்தில் கட்சியை வலுப்படுத்தும் பணி தேர்தலுக்குப் பிறகும் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தங்களது ஆதிக்கத்தை இழந்தன அதே சமயம் காங்கிரஸ் கட்சி இருக்கும் இடமே தெரியாமல் இருந்தது. இந்த நிலையில்தான் அங்கே மாநிலத்தில் நிகழும் பெண்களுக்கு எதிரான தொடர் வன்முறையை எதிர்த்து தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறது காங்கிரஸ் தற்போது அதை மையமாக வைத்தே தேர்தலையும் சந்திக்க உள்ளது.


உத்திரப்பிரதேசத்தில் பிப்ரவரி 10 தொடங்கி மார்ச் 7 வரை ஏழு பகுதிகளாக தேர்தல்கள் நடக்க உள்ளன. அடுத்த சில நாட்களிலேயே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன.