Rahul Gandhi - Cobbler: ராகுல் காந்தி தைத்த செருப்பை யாருக்கும் தரமாட்டேன், அதை என் கடையில் எப்பொழுதும் தொங்க விடுவேன், இது விலைமதிப்பற்றது என செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் தெரிவித்திருக்கிறார்,


செருப்பு தைக்கும் தொழிலாளி - ராகுல் காந்தி சந்திப்பு: 


காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த வெள்ளிக்கிழமை உத்தரப் பிரதேசத்தில் சுல்தான்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ​அவதூறு வழக்கில் ஆஜரானார்.


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிரான கருத்துக்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்காக  ராகுல் காந்தி ஆஜரானார்.  அப்போது நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள செருப்புத் தொழிலாளி ஒருவரைச் சந்தித்தார்.


அப்போது ராகுல் காந்தி செருப்புத் தொழிலாளி ராம் சைட் என்பவரிடம் உரையாடினார். அந்த தருணத்தில் தொழிலாளி "நான் பொருளாதார ரீதியாக பலவீனமாக இருப்பதாக அவரிடம் சொன்னேன், அவரிடம் சில உதவி கேட்டேன்.  மேலும் நான் எப்படி காலணிகளை சரிசெய்கிறேன் என்பதையும் காட்டினேன்." என தெரிவித்தார்.


அப்போது சில நிமிடங்கள் செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் நேரம் செலவழித்த ராகுல் காந்தி, அவருக்கு உதவும் விதமாக, செருப்பை எப்படி தைப்பது என கேட்டறிந்து செருப்பை தைத்தார். இந்த காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலானது.






இதையடுத்து, அந்த தொழிலாளிக்கு, ராகுல் காந்தி செருப்பு தைக்கும் இயந்திரத்தை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.


”கோடி ரூபா கொடுத்தாலும் தரமாட்டேன்”:


இந்நிலையில், ராகுல் காந்தி தைத்த செருப்பை தருமாறு, பலர் கேட்டதாக ராம் சைட் தெரிவித்தார். சிலர் 10 லட்சம்வரை கொடுப்பதாக கூட தெரிவித்தார். ஆனால், ராகுல் தைத்த செருப்பை கோடி ரூபாய் கொடுத்தாலும் தர மாட்டேன் என அவர் தெரிவித்தார். ராகுல் காந்தி தைத்த செருப்பானது, விலைமதிப்பற்றது, அதை பிரேம் செய்து, கடையில்  தொங்கவிடப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.