ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களில் சமீபத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் இந்திய வரலாற்றில் இதுவரை கைப்பற்றிடாத அளவுக்கு பணம் சிக்கியது. காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் சாஹுவின் வீடுகளிலும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.
நாட்டை அதிரவிட்ட வருமான வரித்துறை ரெய்டு:
மேல்குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து கோடி கணக்கிலான பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 5 நாள்கள், வருமான வரித்துறை நடத்திய சோதனையில் பீரோக்கள் மற்றும் பெட்டிகள் நிரம்ப பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டை திரும்பி பார்க்க வைத்த இந்த சோதனையில் மொத்தம் 351 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மீட்கப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் பயன்படுத்திய நோட்டு எண்ணும் இயந்திரம், பழுதடையும் அளவுக்கு பணம் சிக்கியிருக்கிறது.
ஒடிசாவில் உள்ள போலங்கிர், சம்பல்பூர் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி, லோஹர்டகா ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஒடிசா மற்றும் ஜார்க்கண்டில் உள்ள பௌத் டிஸ்டில்லரீஸ் பிரைவேட் லிமிடெட் (பிடிபிஎல்) நிறுவனத்திலும் ரெய்டு நடத்தப்பட்டது. தீரஜ் சாஹு நடத்தி வரும் தொழிலுக்கும் தங்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என காங்கிரஸ் விளக்கம் அளித்திருந்தது.
சிக்கிய பணம் யாருடையது?
சோதனை நடந்து 10 நாள்கள் ஆன நிலையில், சிக்கிய பணம் குறித்து முதல்முறையாக மெளனம் கலைத்துள்ளார் காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹு. சோதனையில் சிக்கிய பணம் நேரடியாக தனக்கு சொந்தமானது இல்லை என்றும் சோதனை நடத்தப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தமானது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "சுமார் 35 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து வரும் என் மீது இதுபோன்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது இதுவே முதல் முறை. நான் வேதனை அடைகிறேன். மீட்கப்பட்ட பணம் எனது நிறுவனத்துக்கு சொந்தமானது என என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.
நாங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மதுபான வியாபாரத்தில் உள்ளோம். நான் அரசியலில் ஈடுபட்டுள்ளேன். வணிகத்தில் அதிக கவனம் செலுத்தவில்லை. குடும்பத்தினரால் எனது தொழில் கவனிக்கப்படுகிறது. தொழில் எப்படி செல்கிறது என அவ்வப்போது விசாரிப்பேன்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம், மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள எங்கள் நிறுவனங்களுக்கு சொந்தமானது. தொழிலை வெளிப்படையாக செய்து வருகிறோம். சோதனையில் சிக்கிய பணம் மதுபானம் விற்று கிடைத்த பணம். ஏனெனில், மதுபான வியாபாரத்தில் கிடைத்த பணத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது எனது நிறுவனத்தின் பணம்.
பணம் என்னுடையது அல்ல. அது எனது குடும்பம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சொந்தமானது. எனது குடும்ப உறுப்பினர்கள் தேவைப்பட்டால் வருமான வரித்துறைக்கு விளக்கம் அளிப்பார்கள். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம்" என்றார்.