காங்கிரஸ் தேசிய அளவில் நம்பகத்தன்மை வாய்ந்த எதிர்க்கட்சி எனக் கூறியுள்ளார் அக்கட்சியின் திருவனந்தபுரம் எம்.பி.யும் மூத்த தலைவருமான சசி தரூர்.


உ.பி. பஞ்சாப், உத்தர்காண்ட் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது. பஞ்சாபிலும் காங்கிரஸ்தனது ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது.


403 தொகுதிகளை கொண்ட உ.பி.யில் இரண்டு இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபில் கடந்த தேர்தலில் 77 இடங்களில் வெற்றி பெற்று இருந்த நிலையில் அது 18 ஆக குறைந்தது. மணிப்பூரில் 28 இடங்களை வைத்திருந்த நிலையில் அங்கு 4 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. கோவாவில் 17 இடங்களை கொண்டிருந்த காங்கிரஸுக்கு இந்த தடவை 11 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. உத்தர்காண்ட் மாநிலத்தில் மட்டும் தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 11-ல் இருந்து 19-ஆக உயர்ந்து இருக்கிறது.


இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி தேர்தல் தோல்வி குறித்து ஆலோசித்தது.


இச்சூழலில், அவர் தனது ட்விட்டரில் ஒரு சாவரஸ்யமான ட்வீட்டைப் பதிவு செய்துள்ளார். அதில், ஒரு புள்ளிவிவரத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் கட்சிவாரியாக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை உள்ளது. அதன்படி, பாஜக 1443, காங்கிரஸ் 753, திரிணமூல் காங்கிரஸ் 236, ஆம் ஆத்மி 156, ஒய்எஸ்ஆர் 151, திமுக 139, பிஜு ஜனதா தளம் 114, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி 103 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


அதனால் நாடு முழுவதும் பாஜகவுக்கு அடுத்தபடியாக காங்கிரஸுக்கே அதிக எம்எல்ஏக்கள் இருப்பது புலப்படுகிறது.


இதைக் குறிப்பிட்டுள்ள சசி தரூர், "அதனால் தான் இந்திய தேசிய காங்கிரஸ் அனைத்து எதிர்க்கட்சிகளிலும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆகையால் அது மறுசீரமைப்பதும், புத்துயிர் பெறச் செய்வதும் அவசியம்" என்று பதிவிட்டுள்ளார்.


இந்த ட்வீட் கவனம் பெற்றுள்ளது. இருப்பினும், எம்எல்ஏக்களின் எண்ணிக்கை எப்போதைய நிலவரப்படியானது என்பது பற்றிய தகவல் ஏதும் இல்லை.






பாஜகவின் பலம் என்ன?


5 மாநிலங்களிலும் உள்ள 690 எம்.எல்.ஏ. தொகுதிகளில் 54 இடங்கள் மட்டுமே காங்கிரஸுக்கு கிடைத்து இருக்கிறது.
தற்போதைய 5 மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் உள்ள 31 மாநிலங்களுள் 18 மாநிலங்களில் ஆளுங்கட்சியாகப் பொறுப்பு வகிக்கிறது. அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், கோவா, குஜராத், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா, உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. 


பாஜக அருணாச்சலப் பிரதேசம், கோவா, குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தராகாண்ட் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. அதே போல, அசாம், பீகார், ஹரியானா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பாஜக இடம்பெற்றுள்ள கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஆட்சி நடைபெற்று வருகிறது.