பீஹார் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் மீது காங்கிரஸ் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கும், வாக்குத் திருட்டு நடந்ததாக கூறப்படுவதற்கும் எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று, பீகார் தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷகீல் அகமது கூறியுள்ளார். இதனால், ராகுல் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பீகார் தோல்வி - காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி
பீஹார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. மறுபுறம், ஓட்டு திருட்டு, இவிஎம் இயந்திரத்தில் முறைகேடு என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதனால், காங்கிரஸ் முக்கிய தலைவர்களும், கட்சியின் தொண்டர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தேர்தல் முடிவுகளுக்கு அடுத்த நாளே கட்சியிலிருந்து விலகிய காங்கிரஸ் மூத்த தலைவர்
பீகாரில் காங்கிரஸ் கட்சியின் பெரும் தோல்வியைத் தொடர்ந்து, பலரும் கட்சியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வரும் சூழலில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷகீல் அகமது, தேர்தல் முடிவு வெளியான அடுத்த நாளே கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இது தொடர்பாக காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், பீகார் சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட யுக்திகள் அனைத்தும் பலவீனமாக இருந்தததாகவும், ராகுலின் ஓட்டு அதிகார யாத்திரையில், கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் மட்டுமே கலந்து கொண்டனர் என்றும், உண்மையான வாக்காளர்கள் பங்கேற்கவே இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஷகீல் அகமது அடுக்கிய குற்றச்சாட்டுகள்
மேலும், பீஹார் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது காங்கிரஸ் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்றும், அதேபோல, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்க்கும் காங்கிரஸின் அணுகுமுறைக்கு மக்களிடையே எந்த வரவேற்பும் இல்லை என்றும் ஷகீல் அகமது தெரிவித்துள்ளார்.
அதேபோல, தேர்தலில் போட்டியிடுவதற்கான சீட் வழங்குவதில் ஊழல் நடந்துள்ளதாகவும், கட்சியில் இருந்து விலகும் முடிவை ஏற்கனவே எடுத்ததாகவும், ஆனால், தன்னால் ஓட்டுகள் குறைந்து விடக்கூடாது என்பதால் தேர்தலுக்கு முன்பாக அறிவிக்காமல் தற்போது அறிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது இந்த முடிவிற்கு காரணம், கட்சியின் கருத்தியலுடன் ஏற்பட்ட முரண்பாடு அல்ல என்று கூறியுள்ள அவர், கட்சியில் உள்ள சில குறிப்பிட்ட நபர்களுடன் உள்ள தனிப்பட்ட வேறுபாடுகளால் தான் என்று தெரிவித்துள்ளார். இதற்குப் பின்னர் தான் வேறு கட்சியிலோ அல்லது அமைப்பிலோ சேரும் எண்ணம் இல்லை என்றும், தனது முன்னோர்களைப் போலவே, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளில் தனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஊடக பேட்டியிலும் தனது கருத்தை வெளிப்படுத்திய ஷகீல் அகமது
இதனிடையே, ஏஎன்ஐ செய்தி நிறுனத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், பீகார் முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மோசடி செய்யப்பட்டுள்ளதா என்று என்னால் கூற முடியாது, ஆனால் அது குறித்த சந்தேகங்கள் எழுகின்றன. 65 லட்சம் மக்களின் வாக்குகள் குறைக்கப்பட்டது மிகவும் ஆச்சரியமளிக்கிறது... ஆனால், தேர்தலுக்கு முன்பு இது தொடர்பாக எந்த போராட்டமும் நடந்ததாக எங்களுக்குத் தெரியவில்லை... அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதைக் கூட நான் பார்க்கவில்லை... 65 லட்சம் மக்களின் வாக்குகள் குறைக்கப்பட்டிருந்தால், 65 இடங்களில் போராட்டங்கள் நடந்திருக்க வேண்டும், ஆனால் அப்படி எங்கும் காணப்படவில்லை..." என்று ஷகீல் அகமது கூறியுள்ளார்.
அவரது இந்த கருத்து, ராகுல் காந்தி கூறிவரும் குற்றச்சாட்டுக்கு அப்படி நேர் எதிராக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஒருவரே இப்படி கூறியிருப்பது, ராகுலுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.