அமெரிக்காவை சேர்ந்த  ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகளை செய்ததாக அந்த ஆய்வறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அதானி குழுமம் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. பங்கு சந்தையில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அதானி குழுமம் இழப்பை சந்தித்திருப்பதாக தகவல் வெளியானது.


அதானி  முறைகேடு தொடர்பாக இரண்டாவது ஆய்வறிக்கை:


இந்த சர்ச்சையே இன்னும் அடங்காத நிலையில், அதானி குறித்து மற்றொருஅமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம் (OCCRP) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், பங்கு சந்தையில் அதானி குழுமம் பல்வேறு விதமான முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.


பல்வேறு நாடுகளை சேர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர்கள்தான், OCCRP அமைப்பை நடத்தி வருகின்றனர். "அதானி குழுமத்தில் பெரும்பைான்மை பங்கினை வைத்துள்ள அதானி குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் பொதுத்துறை முதலீட்டாளர்கள் (அரசு நிறுவனங்கள்) உறவு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள், அதானி நிறுவனங்களின் பங்கின் விலையை உயர்த்த உதவியுள்ளனர். எங்களுக்கு கிடைத்துள்ள பிரத்யேக ஆவணங்களின் முலம் இது தெரிய வந்துள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.


அதானி முறைகேடு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது ஆய்வறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, இது தொடர்பாக பேசியுள்ளார்.


அதானிக்கு ஏன் இவ்வளவு சலுகைகள் அளிக்கப்படுகிறது?


"ஜி 20 தலைவர்கள் இங்கு வருவதற்கு முன்பு இப்படி நடந்துள்ளது. பிரதமருக்கு நெருக்கமான ஒரு மனிதருக்கு (அதானி) சொந்தமான இந்த சிறப்பான நிறுவனம் எது என்றும், இந்தியா போன்ற பொருளாதாரத்தில் இந்த மனிதனுக்கு ஏன் இவ்வளவு சலுகைகள் கொடுக்கப்படுகிறது என்றும் அவர்கள் கேட்கப் போகிறார்கள்?


விசாரணை நடந்தது, செபிக்கு ஆதாரம் கொடுக்கப்பட்டது. ஆனால், கெளதம் அதானி எந்த தவறும் செய்யவில்லை என செபி தெரிவித்துள்ளது. இதனால், இங்கு ஏதோ தவறு இருப்பது தெளிவாகிறது.


இது யாருடைய பணம்?


முதல் கேள்வி எழுகிறது. அது என்னவென்றால். இது யாருடைய பணம்? இது அதானி உடையுதா அல்லது வேறு யாருடையதா? இதற்கு மூளையாக செயல்பட்டவர் கௌதம் அதானியின் சகோதரரான வினோத் அதானி. இந்த பண மோசடியில் மேலும் இருவர் ஈடுபட்டுள்ளனர். ஒருவர் நசீர் அலி ஷபான் அஹ்லி என்று அழைக்கப்படும் ஒரு ஜென்டில்மேன்.


மற்றொருவர் சாங் சுங் லிங் என்று அழைக்கப்படும் சீன ஜென்டில்மேன். எனவே, இரண்டாவது கேள்வி எழுகிறது. கிட்டத்தட்ட அனைத்து இந்திய உள்கட்டமைப்புகளையும் கட்டுப்படுத்தும் நிறுவனங்களில் ஒன்றின் மதிப்பீட்டில் இந்த இரண்டு வெளிநாட்டினரும் விளையாட அனுமதிக்கப்படுவது ஏன்?


இந்தியாவில் ஜி-20 உச்சிமாநாடு நடைபெறுகிறது. இது உலகில் இந்தியாவின் நிலையைப் பற்றியது. இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு மிகவும் முக்கியமானது என்னவென்றால், நமது பொருளாதாரச் சூழல் மற்றும் இங்கு செயல்படும் வணிகங்களில் ஒரு சம நிலை மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் உள்ளது. 


இன்று காலை, இரண்டு உலகளாவிய நிதி செய்தித்தாள்கள் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளன. இவை தற்செயலான செய்தித்தாள்கள் அல்ல. இந்த செய்தித்தாள்கள் இந்தியாவில் முதலீடு மற்றும் உலகின் பிற நாடுகளில் இந்தியா பற்றிய பார்வையை பாதிக்கிறது" என்றார்.