இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, இரண்டாவது யாத்திரையை தொடங்கியுள்ளது காங்கிரஸ். அதன்படி, மணிப்பூரில் யாத்திரையை தொடங்கிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நாகாலாந்து வழியாக அஸ்ஸாம் மாநிலம் சென்றுள்ளார்.


அங்கு, நாகோனில் உள்ள படத்ரவா தன் புனித தலத்துக்கு ராகுல் காந்தி சென்றுள்ளார். சமூக சீர்திருத்தவாதியும் மதகுருவான ஸ்ரீமந்த சங்கரதேவாவின் பிறந்த இடமாக படத்ரவா தன் புனித தலம் உள்ளது. ஆனால், புனித தலத்துக்கு உள்ளே செல்ல ராகுல் காந்தி அனுமதிக்கப்படவில்லை.


கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட ராகுல் காந்தி:


அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று தேவையற்று போட்டி போடுவதாக ராகுல் காந்தி மீது குற்றஞ்சாட்டிய பாஜக மூத்த தலைவரும் அஸ்ஸாம் மாநில முதலமைச்சருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா, "ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு பிறகு கோயிலுக்கு செல்லுமாறு" வலியுறுத்தியுள்ளார்.


அழைப்பு விடுத்ததாலேயே தான் புனித தலத்துக்கு சென்றதாகவும் ஏன் தடுத்த நிறுத்தப்பட்டேன் என்பதற்கு காரணம் எதுவும் கூறவில்லை என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விரிவாக பேசுகையில், "நாங்கள் கோவிலுக்கு செல்ல முயற்சிக்கிறோம். எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


இப்போது உள்ளே செல்ல முடியாது என்று சொல்கிறார்கள். வலுக்கட்டாயமாக எதையும் செய்யப் போவதில்லை. நாங்கள் யாத்திரையை மேற்கொள்ள வேண்டும். காரணம் என்ன என்றே அவர்களிடம் கேட்கிறோம்? நாங்கள் யாரையும் தொந்தரவு செய்யப் போவதில்லை. எங்களுக்கு அழைப்பு விடுத்ததாலேயே அங்கு சென்றோம்" என்றார்.


கோயில் நிர்வாகம் விளக்கம்:


படத்ரவா தன் புனித தலத்துக்கு ராகுல் காந்தி செல்வதும் உள்ளே செல்லவிடாமல் அவருக்கு அனுமதி மறுக்கப்படுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தான் தடுத்து நிறுத்தப்படுவது ஏன் என காவல்துறையிடம் ராகுல் காந்தி கேட்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.


 






கோயிலுக்கு உள்ளே செல்ல காவல்துறைக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து ராகுல் காந்தி தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து விளக்கம் அளித்த கோயில் நிர்வாக கமிட்டி தலைவர் ஜோகேந்திர நாராயண் தேவ், "ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வின் காரணமாக மதியம் 3 மணிக்குப் பிறகு கோயிலுக்குச் செல்லுமாறு ராகுல் காந்தியைக் கேட்டுக் கொண்டோம். 10,000 பேர் கோயிலுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நேரத்தில் ராகுல் காந்தி இங்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை. ஏனெனில், அவரை வரவேற்கும் பணியில் சில சிரமங்கள் இருக்கலாம். அவர் நாளை மதியம் 3 மணிக்கு மேல் வரலாம். அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்க முடியும். நாங்கள் ஏற்கனவே உள்ளூர் எம்.எல்.ஏ., மாவட்ட கமிஷனர் மற்றும் எஸ்.பி. ஆகியோருக்கு தெரிவித்துள்ளோம்" என்றார்.


ராகுல் காந்தி யாத்திரையின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சென்ற வாகனத்தின் மீது கல்வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.