மணிப்பூர் பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம், நாடாளுமன்றத்தையே புரட்டிபோட்டுள்ளது. 


நாடாளுமன்றத்தில் மணிப்பூர் இனக்கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை தொடங்கிய நாடாளுமன்றம், நான்காவது நாளாக இன்றும் முடங்கி போயுள்ளது. 


எதிர்க்கட்சிகளை தீவிரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டு பேசிய பிரதமர்:


மணிப்பூர் பிரச்னை தொடர்பாக இரு அவைகளிலும் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும், விதி எண் 267இன் கீழ் அனைத்து அவை நடவடிக்கைகளையும் ஒத்திவைத்துவிட்டு, இந்த பிரச்னை குறித்து நீண்ட விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர்.  அனைத்து கட்சிகளுக்கும், இதுகுறித்து பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


ஆனால், விதி எண் 176இன் கீழ் குறுகிய கால விவாதத்திற்கே மத்திய அரசு சம்மதித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க தயார், ஆனால், அதை நடத்த விடாமல் எதிர்க்கட்சியினர் முடக்கி வருவதாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா ஆகியோர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.


"எப்படி வேணும்னாலும் அழைச்சுக்கோங்க"


இதற்கிடையே, மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அக்கட்சி எம்பிக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சியினரை தீவிரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டு பேசினார். 


கிழக்கிந்திய கம்பெனி, இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி இந்தியன் முஜாஹிதீன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற தீவிரவாத அமைப்புகள் வரையில் பல அமைப்புகளின் பெயர்களில் கூட இந்தியா என்ற வார்த்தை உள்ளது என பிரதமர் மோடி விமர்சித்தார்.


தீவிரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டு பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, "நீங்கள் என்ன வேண்டுமானாலும் எங்களை அழைக்கவும், மிஸ்டர் மோடி. நாங்கள் இந்தியாதான். மணிப்பூரை குணப்படுத்தவும், ஒவ்வொரு பெண் மற்றும் குழந்தையின் கண்ணீரை துடைக்கவும் நாங்கள் உதவுவோம். இந்திய மக்கள் அனைவருக்கும் அன்பையும் அமைதியையும் திரும்பக் கொண்டு வருவோம். இந்தியா என்ற கருத்தாக்கத்தை மணிப்பூரில் மீண்டும் கட்டியெழுப்புவோம்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு பதிலடி அளித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "50 உறுப்பினர்கள் 267 விதியின் கீழ் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்தும், கடந்த நான்கு நாட்களாக இதே போன்ற நோட்டீஸ்கள் கொடுக்கப்பட்டும், மணிப்பூர் விவகாரத்தில் விவாதத்திற்கு ஏன் அரசு தயாராக இல்லை. நாங்கள் மணிப்பூரைப் பற்றி பேசுகிறோம். ஆனால் பிரதமர் கிழக்கிந்திய கம்பெனி பற்றி பேசுகிறார்" என்றார்.