டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வெளியே முகாமிட்டுள்ள நோயாளிகளின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு சந்தித்தார். கடும் குளிருக்கு மத்தியிலும் சாலை, நடைபாதை, சுரங்கப்பாதை ஆகியவற்றில் மக்கள் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டதற்கு மத்திய அரசின் மீதும் டெல்லி அரசின் மீதும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.


தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ் மருத்துவமனை), டெல்லி மக்கள் மட்டும் இன்றி வெளி மாநிலங்களை சேர்ந்த மக்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றாக இருப்பதால் மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.



கடும் குளிரில் மக்கள்:


இந்த சூழலில், கடந்த சில நாட்களாகவே அளவுக்கு அதிகமான கூட்டம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குவிந்த வண்ணம் இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் குடும்பத்தினர், கடும் குளிரிலும் ரோட்டில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில், மருத்துவமனை வெளியே முகாமிட்டுள்ள நோயாளிகளின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று இரவு சந்தித்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மீதும் டெல்லி அரசின் மீதும் கடும் விமர்சனங்களை மேற்கொண்ட அவர், "நோயின் சுமை, கடும் குளிர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அனுதாபம் இல்லாமல் இருக்கும் அரசு.


களத்திற்கே சென்ற ராகுல் காந்தி:


இன்று நான், AIIMSக்கு வெளியே சிகிச்சைக்காக வந்த நோயாளிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்தேன். சிகிச்சை பெற வந்தவர்கள், செல்லும் வழியில், சாலைகளில், நடைபாதைகளில் சுரங்கப்பாதைகளில் தூங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். குளிர், பசி மற்றும் சிரமங்களுக்கு மத்தியிலும் நம்பிக்கையின் சுடரை கொண்டுள்ளனர். மத்திய, டெல்லி அரசுகள், தங்களின் பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டன" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


 






எய்ம்ஸ் மருத்துவமனையில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 13 வயது மகளின் தந்தை பவன் குமார், ANI செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "டிசம்பர் 3 ஆம் தேதி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தோம். இன்னும் சரியான சிகிச்சை கிடைக்கவில்லை.


அவர் (ராகுல் காந்தி) என்னிடம் எனது தொலைபேசி எண்ணைக் கேட்டார். மேலும் அவரது குழு என்னைத் தொடர்புகொண்டு முடிந்தவரை எனக்கு உதவுவதாகக் கூறினார்" என்றார். தனது மகளின் சிகிச்சைக்கு பண உதவி தருவதாக ராகுல் காந்தி உறுதியளித்ததாக சிறுமியின் தாயார் கூறினார்.