அரசியலில் சோனியா காந்தி குடும்பமே தன்னை உருவாக்கியதாகவும் பின்னர், அவர்களே தன்னை ஒதுக்கி வைத்ததாகவும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் வேதனையாக தெரிவித்துள்ளார். 


சர்ச்சைகளுக்கு பேர் போனவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர். சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் மணிசங்கர், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நண்பர் ஆவார்.


மணிசங்கர் பரபர பேட்டி:


மணிசங்கரை அரசியலுக்கு அழைத்து வந்ததே ராஜீவ் காந்திதான். மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பல முக்கிய துறைகளை தன் வசம் வைத்திருந்தார். சர்ச்சை கருத்துகளுக்காக பல முறை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.


இவர் எழுதியுள்ள புத்தகம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு நிலவிய அரசியல் சூழல் குறித்தும் காங்கிரஸ் கட்சி குறித்தும் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், அரசியலில் சோனியா காந்தி குடும்பமே தன்னை உருவாக்கியதாகவும் பின்னர், அவர்களே தன்னை ஒதுக்கி வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


இதுகுறித்து விரிவாக பேசியுள்ள மணிசங்கர், "10 ஆண்டுகளாக, சோனியா காந்தியை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்படவில்லை. ஒருமுறை தவிர, ராகுல் காந்தியுடன் அர்த்தமுள்ள நேரத்தை செலவிட எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.


மேலும் நான் ஒரு சந்தர்ப்பத்தில், இல்லை, இரண்டு சந்தர்ப்பங்களைத் தவிர, பிரியங்காவை நேரில் பேசும் வாய்ப்பு எனக்கு வழங்கப்படவில்லை. அவர் என்னிடம் தொலைபேசியில் பேசுவார். அதனால் நான் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன்.


"பிரணாப் பிரதமராகி இருந்தால் கதையே வேறு"


எனது அரசியல் வாழ்க்கை காந்தி (சோனியா) குடும்பத்தால் உருவாக்கப்பட்டது. காந்தி குடும்பத்தால் ஒதுக்கப்பட்டுள்ளேன் என்பதுதான் என் வாழ்க்கையின் கேலிக்கூத்து. எனவே, என்ன நடந்தாலும் அதை நான் ஏற்று கொள்கிறேன்.


நான் கட்சிக்கு வெளியே இருக்க பழகிவிட்டேன். நான் இன்னும் கட்சியில் உறுப்பினராக இருக்கிறேன். நான் ஒருபோதும் மாறமாட்டேன். நிச்சயமாக பாஜகவுக்கு போக மாட்டேன்" என்றார். 2012 அரசியல் சூழல் குறித்து பேசிய அவர், "2012ல், இரண்டு பேரழிவுகள் நடந்தன: ஒன்று சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.


டாக்டர் மன்மோகன் சிங்குக்கு ஆறு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டன. அதனால், அரசுத் தலைமையிலும், கட்சித் தலைமையிலும் முடமானோம். ஆனால், இன்னும் ஆற்றல் நிரம்பிய, யோசனைகள் நிறைந்த, ஒரு குறிப்பிட்ட அளவு கவர்ச்சியுடன், கட்சியையோ அல்லது அரசாங்கத்தையோ அல்லது இரண்டையும் கூட நடத்தக்கூடிய ஒரு மனிதர் இருந்தார். அதுதான் பிரணாப் முகர்ஜி.


டாக்டர் மன்மோகன் சிங் ஜனாதிபதியாகவும், பிரணாப் பிரதமராகவும் இருந்திருந்தால், 2014ல் (லோக்சபா தேர்தலில்) நாம் தோற்றிருப்போம். ஆனால், மோசமான அவமானகரமான தோல்வியாக இருந்திருக்காது" என்றார்.