தேர்தல் பத்திரங்களில் நன்கொடை பெற்றது தொடர்பாக பாஜக அரசு வெளை அறிக்கை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
தேர்தல் பத்திரங்கள்:
அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும் வகையில், தேர்தல் பத்திரங்கள் என்ற முறை தொடங்கப்பட்டது. இந்த பத்திரங்களானது, எஸ்.பி.ஐ வங்கி மூலமாக மட்டுமே வழங்கப்பட்டது. இந்த பத்திரங்கள் வழங்கப்பட்டதில், பணம் அளித்தவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்பட்டன. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு வழங்குமாறு எஸ்.பி.ஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் தேர்தல் பத்திரங்களின் விவரங்கள் தொடர்பாக எஸ்பிஐ வங்கி வழங்கியது. இதில் பாஜக மற்றும் பிற கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பல கோடி பணம் பெற்றது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சட்டவிரோத தேர்தல் பத்திரங்கள்:
அதில், “ அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ரெய்டுகளுக்குப் பிறகு மேலும் 15 நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடையாக நிதி வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. மொத்தம் 45 நிறுவனங்கள் பாஜகவிற்கு கிட்டத்தட்ட ரூ.400 கோடி பணம் கொடுத்துள்ளது. இவற்றில் 4 போலி நிறுவனங்களும் அடங்கும். சர்வாதிகார மோடி அரசு, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்துள்ளது.
அதே சமயம் மத்திய ஏஜென்சிகளைப் பயன்படுத்தி பணம் பெற்றுள்ளது! பாஜக அரசியலமைப்பிற்கு எதிரான மற்றும் சட்டவிரோதமான தேர்தல் பத்திரங்களைப் பயன்படுத்தியுள்ளது. மேலும் அதனை பயன்படுத்து நன்கொடை பெற்றுள்ளது. இதிக நன்கொடை பெறுவதற்காக செய்யப்படும் பிளாக்மெயிலா? பணம் பறிப்பா? கொள்ளையா? பாஜக உண்மையிலேயே ஜனநாயக தாய் மீது அக்கறை இருந்தால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.