காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி. மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த இவர், தற்போது காங்கிரஸ் மக்களவை குழு தலைவராக உள்ளார். கடந்த 1999ஆம் ஆண்டு முதல் பெர்ஹாம்பூர் மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். ஒரே தொகுதியில் இருந்து 4 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் I.N.D.I.A கூட்டணியில் இடம்பெற்ற போதிலும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாவை ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் கூட்டணியில் அவ்வப்போது குழப்பம் ஏற்படுவது வழக்கம்.


ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பறந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி:


இந்த நிலையில், ஹெல்மெட் அணியாமல் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கையை விட்டுவிட்டு பைக்கை ஓட்டிய சம்பவம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த சம்பவம் பெர்ஹாம்பூரில் இன்று நடந்துள்ளது. சாலை விதிகளை மீறி, ஆபத்தான முறையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பயணித்ததாக பலர் விமர்சித்து வருகின்றனர்.


விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ள அவர், "போலீஸ் தண்டனை கொடுத்தால் பிரச்னை இல்லை. ஆனால், நான் பைக்கில் சென்ற இடத்தில் யாரும் இல்லை" என்றார். பெர்ஹாம்பூரில் சாலையை திறந்து வைப்பதற்காக தனது ஆதரவாளர்களுடன் அவர் சென்றுள்ளார். அதை தொடர்ந்து, ஆதரவாளர்கள் புடைசூழ சாலையில் பைக்கை ஓட்டி சென்றுள்ளார்.


வைரல் வீடியோவால் சர்ச்சை:


அவரின் ஆதரவாளர்கள் பலரும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் பயணிக்க, தொப்பி அணிந்தவாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பைக்கை ஓட்டியுள்ளார். ஹேன்டிலில் இருந்து கையை எடுத்தப்படி சிறிது நேரம் அவர் பைக்கை ஓட்டுவதும் வைரல் வீடியோவில் பதிவாகியுள்ளது. மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய அரசியல் கட்சியை சேர்ந்த தலைவரே இம்மாதிரியான செயலில் ஈடுபடுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 






இம்மாதிரியாக சர்ச்சையில் சிக்குவது ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு ஒன்றும் புதிதல்ல. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின்போது, மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து பிரதமர் மோடியை விமர்சித்த ஆதிர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.


தாம் பிரதமர் மோடியை அவமதிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தார். நாடாளுமன்ற அவை குறிப்பில் இருந்து, அவரது கருத்துக்கள் நீக்கப்பட்டன. பின்னர், விளக்கம் அளித்ததை தொடர்ந்து, அவரது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது.


இதையும் படிக்க: ENG Vs AFG Score LIVE: 5 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து - சுழல் தாக்குதல் நடத்தும் ஆப்கானிஸ்தான்