பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து விலகுமாறு கேப்டன் அமரீந்தர் சிங்கை காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இன்று மாலை பஞ்சாப்பில் நடைபெறவுள்ள காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின்  கூட்டத்திற்கு முன்னதாக, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு வசதியாக முதல்வர் அமரீந்தர் சிங்கை ராஜினாமா செய்யுமாறு கட்சியின் உயர் தலைமை கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால், குழப்பமடைந்த முதல்வர், இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பேசியதாகவும், அவமானப்படுத்தப்படுவதாகவும், அதற்கு பதிலாக கட்சியை ராஜினாமா செய்வதாகவும் கூறினார்.


முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர், முதலமைச்சர் பதவிக்கு பரிசீலிக்கப்படும் பெயர்களில் ஒருவர் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் பிரச்னையில் ராகுல்காந்தி தைரியமாக முடிவெடுத்துள்ளதாக சுனில் ஜாகர் ட்வீட் செய்துள்ளார்.


 






இதனிடையே, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின்  கூட்டத்திற்கு முன்பாக, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் பிற்பகல் 2 மணிக்கு கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 






பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக  நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.