பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2024 உச்சி மாநாடு, இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில்  சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.


”அடுத்த அரசை எதிர்க்கட்சிகள் கூட அமைக்கலாம்"


அந்த வகையில், உச்சி மாநாட்டின் முதல் நாளான இன்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர் கலந்து கொண்டு பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசினார். அடுத்த மாதம், மக்களவை தேர்தல் தொடங்க உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் வியூகம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக விரிவாக பேசிய அவர், "இன்னும் தேர்தல் வரவில்லை. அதனால் எதிர்கட்சிக்கு எவ்வளவு நேரம் இருக்கு என்று தெரியவில்லை.  எதிர்க்கட்சிகளை சாதாரணமாக எடை போட வேண்டாம். அடுத்த அரசை எதிர்க்கட்சிகள் கூட அமைக்கலாம்" என்றார்.


பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து பேசிய அவர், "45.4 சதவிகித இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. நீங்கள் இந்தியாவின் லட்சியம் மற்றும் வளர்ச்சி குறித்து பேசலாம். ஆனால், சுயநலம் பற்றி பேசினால் பதில்கள் வேறாக இருக்கும். பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. 


இரண்டு முறை பிரதமர் மோடிக்கு வாக்களித்த இளைஞர் ஏன் மீண்டும் அவருக்கு வாக்களிக்க வேண்டும்? அவரிடம் ஒன்றும் இல்லை. அரசியல் என்பது கருத்துகள், கொள்கைகள் மற்றும் பிரச்னைகளை சார்ந்தது. அது மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் முடிவுகள் அமையும். கடந்த இரண்டு தேர்தல்களில், பாஜக ஒவ்வொரு வாக்காளரின் கதவுகளையும் தட்டியது. வாக்காளர்களை நேரே சென்று சந்திக்கும் தொண்டர்கள் போன்றவற்றில் காங்கிரசை விட சிறப்பாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.


"மதத்தின் அடிப்படையில் மக்களை அச்சுறுத்துவதை நிறுத்துங்கள்”


கடந்த 10 வருடங்களில் அரசியல் பேச்சுவழக்காக வகுப்புவாதம் மாறி இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். சிறுபான்மையினரை தள்ளி வைப்பதால் இந்த நாடு முன்னேறாது. ஒரு கட்டத்தில், ஒரு சதவிகிதத்தினர் கூட இந்த நாட்டில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று முடிவு செய்து அதை வெடிக்கச் செய்வார்கள். 


அப்போது இந்து-முஸ்லிம் கலவரம் பற்றிய அனைத்து மெத்தனமும் நீங்கும். அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள் என்று அரசை அழைக்கிறேன். நீங்கள் காங்கிரஸை 'போலி மதச்சார்பற்றவர்' என்று தாக்கும் போது, ​​உண்மையான மதச்சார்பற்றவராக இருங்கள் என நான் கூறுகிறேன். மதத்தின் அடிப்படையில் மக்களை அச்சுறுத்துவதை நிறுத்துங்கள்" என்றார்.


எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசிய சசி தரூர், "இந்நாட்டு மக்கள் தமது பிரதிநிதிகளுக்கும் கட்சிகளுக்கும் வாக்களிக்கின்றனர். நாடாளுமன்ற பெரும்பான்மை அதன் பிரதமரை தேர்ந்தெடுக்கிறது. INDIA போன்ற கூட்டணியில், தங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதற்காக, பல்வேறு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடக்கும்" என்றார்.