Farmers' Protest 2.0: விவசாயிகளின் பேரணி தொடங்கியுள்ளதை அடுத்து, டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கண்ணீர் புகை குண்டு வீச்சு:
விவசாயிகள் தங்களது டிராக்டர்களுடன் பஞ்சாபின் ஃபதேகர் சாஹிப்பில் இருந்து அம்பாலா அருகே உள்ள ஷம்பு எல்லையை நோக்கி பேரணியாக தங்களது பயணத்தை தொடங்கியுள்ளனர். இதனிடையே, காவல்துறையினரின் கட்டுப்பாடுகளையும் மீறி, இருசக்கர வாகனத்தில் டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் சிலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்திற்கு இடையே உள்ள, ஷம்பு எல்லைப்பகுதியில் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், அப்பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம்:
பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், இன்று தலைநகர் டெல்லியில் பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். இதில் 200 க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பங்கேற்க உள்ளன. முன்னதாக திங்கட்கிழமை இரவு விவசாய பிரதிநிதிகள் மற்றும் மத்திய அமைச்சர் அடங்கிய குழு இடையேயான பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. குறைந்தபட்ச ஆதார விலைக்கு தெளிவான சட்ட உத்தரவாதம் எதுவும் இல்லை என்பதால், திட்டமிட்டபடி இன்று போராட்டம் நடைபெறும் என விவசாய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், ”விவசாயிகள் முன்னிலைப்படுத்திய பெரும்பாலான பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன, மீதமுள்ள பிரச்னைகளைக் கையாள ஒரு குழுவை அமைக்க அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது” என மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.
144 தடை உத்தரவு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:
விவசாயிகளின் டெல்லி சலோ அணிவகுப்பு காலை 10 மணிக்குத் தொடங்க உள்ளது. இதனிடையே, பஞ்சாபிலிருந்து ஹரியானாவிற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்க, ஹரியானா அரசாங்கம் மாநில எல்லைகளில் விரிவான தடுப்புகளை அமைத்துள்ளது. 2020-21 விவசாயிகளின் போராட்டம் மீண்டும் நிகழாமல் தடுக்கும் முயற்சியில் டெல்லியின் எல்லைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. பிரதான சாலைகளில் முள்வேலி, சிமெண்ட் தடுப்பு, சாலைகளில் ஆணிகள் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே டெல்லியில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது. இதனால், முன் அனுமதியின்றி 5-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடுவது, பேரணியாக செல்வது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரணி அறிவிப்பை முன்னிட்டு, டெல்லி போக்குவரத்திலும் இன்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மீண்டும் விவசாயிகள் போராட்டம் ஏன்?
டெல்லி எல்லையில் கடந்த 2020ம் ஆண்டு தொடங்கி ஓராண்டு நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்திற்குப் பிறகு, மூன்று வேளாண்சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட உத்தரவாதம், சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்துவது, விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ போராட்டத்தை கடந்த ஆண்டு விவசாய அமைப்புகள் அறிவித்தன.