2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவை வீழ்த்தும் நோக்கில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விதமாக, பாட்னாவில் முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் மார். அதைதொடர்ந்து, அண்மையில் காங்கிரஸ் தலைமையில் பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய என பெயரிடப்பட்டது. இதையடுத்து, மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.


அதேபோல் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி என பெயரிடப்பட்டது. இரு தரப்பிலும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. வருகின்ற நடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யூகங்களை இரு தரப்பினரும் வகுத்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்தது குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்தியா என்ற பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கிரிஷ் உப்பாத்யாயா என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். 


இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தரப்பிலும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.


இது குறித்து மூத்த வழக்கறிஞர்  விஜயன் பேசுகையில், ”இந்தியா என்ற பெயர் வைப்பதில் சட்ட சிக்கலாக இருக்காது.  இந்த பெயர் இந்திய அரச்சங்கத்தை குறிக்கக்கூடாது. அப்படி பார்க்கப்போனால் இந்திய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என பல கட்சிகள் இன்றளவும் அந்த பெயரை தான் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியா என்ற பெயர் பயன்படுத்துவது பெரிய விஷயம் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி பேசுகையில், “ மோடி எப்போது இதை பற்றி அதிகம் பேசி வருகிறாரோ, அப்போதே நாங்கள் வெற்றி பெற்று விட்டோம் என்பது அதன் பொருள். முதலில் அவர் எங்களை துட்சமாக மதித்தார், கூட்டணி அமைக்க முடியாது, கூட்டணி நிலைக்காது என கூறினார். ஆனால் அது அனைத்தும் பொய்து போனது. இந்தியா என்பது ஒற்றுமையை குறிக்கும் சொல் ஆகும். இதனால் மக்களுக்கு எந்த குழப்பமும் இருக்காது. மக்களை பற்றி குறைவாக எண்ணுகிறார் மோடி. ஒரு பெயரை வைக்கக்கூடாது என்று சொல்லும் அதிகாரம் யாருக்கும் இல்லை. இந்த வழக்கின் பின் பாஜகவின் அச்சம் உள்ளது. அவர்களுடைய அச்சத்தை நாங்கள் ரசிக்கிறோம்” என கூறியுள்ளார்.


பாஜக தரப்பில் சீனிவாசன் கூறுகையில், “ தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து எதிர்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளனர். இந்த பெயர் அரசியலமைப்புச் சட்டத்தை கொச்சப்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த கூட்டணி நிச்சயமாக தோற்கப்போகும் கூட்டணி, சர்வதேச அளவில், பத்திரிக்கைகளில் இந்தியா தோல்வியடைந்தது என செய்திகள் வெளியாகும். இது தவறான புரிதலை வெளிநாடுகள் மத்தியில் பிரதிபளிக்கும். காங்கிரஸ் கட்சிக்கொடிக்கும் இந்திய தேசத்தின் கொடிக்கும் வித்தியாசங்கள் கிடையாது, பார்ப்பதற்கு ஒரே மாதிரி தான் இருக்கும். அனைவரின் பெயருக்கு பின்னால் காந்தி என போட்டுக்கொள்கின்றனர். தாங்கள் தான் இந்தியா என்ற தோற்றத்தை உருவாக்கும் நோக்கில் இதனை செய்கின்றனர். இதெல்லாம் மக்களை ஏமாற்றும் வேலை” என குறிப்பிட்டுள்ளார்.