குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செப்டம்பர் 17-19 தேதிகளில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகவும், இந்திய அரசின் சார்பில் இரங்கல் தெரிவிக்கவும் லண்டனுக்குச் செல்கிறார்.


இங்கிலாந்தின் அரசின் முன்னாள் தலைவரும் காமன்வெல்த் நாடுகளின் தலைவருமான ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8, 2022 அன்று காலமானார்.


 






ராணி எலிசபெத்தின் மறைவுக்கு முர்மு, துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செப்டம்பர் 12ஆம் தேதி, இரங்கலைத் தெரிவிக்க டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்திற்கு சென்றிருந்தார். 


மகாராணியின் மறைவையொட்டி செப்டம்பர் 11 அன்று இந்தியா அரசு, துக்க தினமாக அனுசரித்தது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் வணிக விமானங்கள் மூலம் பிரிட்டனுக்கு செல்லுமாறும், அங்கிருந்து ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் மூலம் இறுதி சடங்கிற்கு செல்லமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.


இந்த இறுதிச் சடங்கில் சுமார் 500 வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 19 அன்று நடைபெறும் இந்த நிகழ்விற்காக பெரிய அளவிலான நடவடிக்கையை அலுவலர்கள் மேற்கொள்வார்கள் என வெளிநாட்டு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் வட்டாரம் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.


இறுதி சடங்கில் கலந்து கொள்பவர்களுக்கு முடிந்த அளவில் ஏதுவாக போக்குவரத்து வசதிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது.


வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் உள்ள இறுதி சடங்கு நடைபெறும் இடத்திற்கு செல்ல தங்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தவோ ஹெலிகாப்டரில் லண்டன் முழுவதும் பயணிக்கவோ வேண்டாம் என பங்கேற்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 






அதற்குப் பதிலாக, மேற்கு லண்டனில் உள்ள ஒரு இடத்திலிருந்து அபேவுக்கு தனியார் பேருந்துகள் மூலம் அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என வெளிநாட்டு தூதரகங்களுக்கு அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு மற்றும் சாலைகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் காரணமாக இப்படி திட்டமிடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.