பாஜக ஆட்சி அமைத்து 9 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இச்சூழலில், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகள் வருமானம் ஆகிய பிரச்னைகளை முன்வைத்து காங்கிரஸ் 9 கேள்விகளை எழுப்பியுள்ளது. தனது ஆட்சி காலத்தில் துரோகம் செய்த காரணத்தால் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.


"பொதுச் சொத்துக்கள் பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்படுவது ஏன்?"


9 ஆண்டுகளை நிறைவு செய்யும் தினத்தை மன்னிப்பு கேட்கும் தினமாக அனுசரிக்க வேண்டும் என காங்கிரஸ் சாடியுள்ளது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தகவல் தொடர்பு பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பாஜகவை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.


"இந்தியாவில் பணவீக்கமும் வேலையில்லா திண்டாட்டமும் எதனால் உயர்ந்து வருகிறது? பணக்காரர்கள் பணக்காரர்களாகவும், ஏழைகள் ஏழைகளாகவும் மாறுவது ஏன்? பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுச் சொத்துக்கள் பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்படுவது ஏன்?


மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யும் போது விவசாயிகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஏன் பின்பற்றப்படவில்லை.  குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஏன் சட்டப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்கப்படவில்லை? கடந்த ஒன்பது ஆண்டுகளாக விவசாயிகளின் வருமானம் ஏன் இரட்டிப்பாகவில்லை.


திருடர்களை தப்பிக்க விடுவது ஏன்?


திருடர்களை ஏன் தப்பிக்க விடுகிறீர்கள்? பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஊழல் பெருகி வருவதைப் பற்றி ஏன் அமைதியாக இருக்கிறீர்கள், ஏன் இந்தியர்களை கஷ்டப்பட வைக்கிறீர்கள்" என ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பினார்.


தேசிய பாதுகாப்பு குறித்து பேசிய அவர், "2020இல், தவறு செய்யவில்லை என நீங்கள் சீனாவுக்கு சான்றிதழ் கொடுத்த பிறகும் அவர்கள் இந்தியப் பகுதியை ஆக்கிரமித்திருப்பது ஏன் என்று காங்கிரஸ் கேட்க விரும்புகிறது. தேர்தல் ஆதாயங்களுக்காக வேண்டுமென்றே "வெறுப்பு அரசியல்" ஏன் பயன்படுத்தப்படுகிறது. மேலும், சமூகத்தில் அச்சத்தின் சூழல் தூண்டப்படுகிறது.


பெண்கள், தலித்துகள், எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்? ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை ஏன் புறக்கணிக்கிறீர்கள்? எதிர்க்கட்சிகள் மற்றும் தலைவர்களை பழிவாங்கும் அரசியலை நீங்கள் ஏன் செய்கிறீர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை ஏன் அப்பட்டமான பண பலத்தை பயன்படுத்தி பலவீனமாக்குகிறீர்கள்?" என்றார்.


இதை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, "கடந்த ஒன்பது ஆண்டுகளில் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் யதார்த்தத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன.


எனவே நாங்கள் பதில்களைக் கோரும் போது, ​​எங்களை 900 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்ல வேண்டாம். கடந்த ஒன்பது ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை அனைவரும் அறிய விரும்புகிறார்கள். அடுத்த நிகழ்வுகளின் போது மன்னிப்பு கேட்குமாறு நாங்கள் உங்களை (பிரதமர்) வலியுறுத்துவோம்" என்றார்.