Amit Malviya: அமித் மாளவியா மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.


பாஜக பிரமுகர் மீது பாலியல் குற்றச்சாட்டு:


பாரதிய ஜனதா கட்சியின்  ஐடி விங் தலைவர் அமித் மாளவியா பெண்களிடம் "பாலியல் சுரண்டலில்" ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜக தலைவர் ராகுல் சின்ஹாவின் உறவினரும்,  ஆர்எஸ்எஸ் உறுப்பினருமான சாந்தனு சின்ஹா, ”5 நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமின்றி, மேற்குவங்க பாஜக கட்சி அலுவலகங்களிலும் அமித் மாளவியா பெண்களிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபடுவதாக” தெரிவித்துள்ளார். இதனை குறிப்பிட்டு, மாளவியாவை  உடனடியாக பாஜக ஐடி விங் தலைவர்  பதவியில் இருந்து நீக்க வேண்டும் மற்றும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷிரினேட் வலியுறுத்தியுள்ளார். 






காங்கிரஸ் ஆவேசம்:


இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரியா ஷிரினேட், ”பாஜகவிடம் நாங்கள் கேட்பது பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை மட்டுமே. உண்மை நிலை என்னவென்றால் பிரதமர் மோடி பதவியேற்று 24 மணி நேரத்துக்குள்ளாகவே, பாஜகவின் மிக முக்கியமான பிரமுகரான, கட்சியின் ஐடி விங் தலைவர் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அமித் மாளவியாவை அவரது பதவியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று இன்று நாங்கள் கோருகிறோம். இது மிகவும் செல்வாக்கு மிக்க பதவி. இது அதிகாரப் பதவி, அவர் இந்த பதவியில் நீடித்தல் சுதந்திரமான விசாரணையும் இருக்க முடியாது. அவரை பதவி நீக்கம் செய்யாத வரையில் நீதி கிடைக்காது," என்று தெரிவித்தார்.


சாந்தனு சின்காவிற்கு அமித் மாளவியா நோட்டீஸ்:


இதனிடையே, RSS உறுப்பினர் சின்ஹா சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக, அமித் மாளவியா தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில்,  "குற்றச்சாட்டுகளின் தன்மை மிகவும் புண்படுத்தும் வகையில் உள்ளது.  எனது தரப்பாளர் செய்ததாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக செயல் பொய்யானது. அமித் மாளவியாவின் கண்ணியம் மற்றும் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக பொய்யாகக் குற்றம் சாட்டுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.