தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலிக்கு செல்ல உள்ளார். மக்களவை தேர்தல் வெளியாகி, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைத்துள்ளது. மோடி நேற்று பிரதமராக பதவியேற்று கொண்டார்.
இத்தாலி செல்லும் மோடி: இந்த நிலையில், மோடியின் மூன்றாவது பதவிக்காலத்தில் முதல் வெளிநாட்டு பயணமாக வரும் ஜூன் 13ஆம் தேதி அவர் இத்தாலி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலியில் நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பு விடுத்திருந்தார்.
இத்தாலி பிரதமர் விடுத்த அழைப்பை மோடியும் ஏற்று கொண்டுள்ளார். இத்தாலி அபுலியாவில் உள்ள போர்கோ எக்னாசியாவில் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. வரும் ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் உச்சி மாநாடு 15ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
மோடியின் இத்தாலி பயணம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "இத்தாலியின் புக்லியா பகுதியில் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டின் அமர்வுகளில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்து, இத்தாலிய பிரதமர் மெலோனியுடன் மோடி உரையாடினார்.
இத்தாலி பிரதமர் விடுத்த அழைப்பு: தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து ஒத்துழைப்பதன் மூலம் இத்தாலிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை தெரிவித்தார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னேறிய நாடுகள் என்று கருதப்படும், வளர்ந்த பொருளாதாரங்களைக் கொண்ட ஏழு நாடுகள் இருக்கும் அமைப்பே Group of Seven என்றழைக்கப்படும் ஜி7. இதில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.
ஆண்டுதோறும் இந்த மாநாடு 3 நாட்களுக்கு நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு, இதன் தலைவராக சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படுவர். அந்தவகையில், இந்த ஆண்டு ஜி7 உச்சி மாநாடு இத்தாலியில் நடைபெற உள்ளது.
கடந்தாண்டு, ஜி7 உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளுடன் இந்தியா, தென்கொரியா, அவுஸ்திரேலியா, பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா, கொமோரோஸ், குக் தீவு ஆகிய 7 நாடுகள், சிறப்பு அழைப்பின்பேரில் கலந்து கொண்டன.
ஜி7 உச்சி மாநாட்டை தொடர்ந்து ஜூன் 15, 16 தேதிகளில் சுவிஸ் அமைதி உச்சி மாநாடு நடைபெறுகிறது. உலகளவில் ரஷியா - உக்ரைன் போர், காசா போர் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அமைதி உச்சி மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை.