மும்பையில் இன்ஸ்டாமார்ட் மூலம் ஆணுறை விற்பனை கடந்த ஆண்டை விட 570 மடங்கு அதிகரித்துள்ளதாக சுவாரஸ்யத் தகவல் வெளியாகியுள்ளது.


இன்ஸ்டாமார்ட் விற்பனை


பிரபல உணவு டெலிவரி செயலியான ஸ்விக்கி தன் இன்ஸ்டாமார்ட் தளத்தின் மூலம் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மளிகை, இறைச்சி உள்ளிட்ட பொருள்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்து வருகிறது.


கடைக்குச் சென்று மளிகைப் பொருள்கள் வாங்கும் சுமையைத் தவிர்த்து தள்ளுபடிகள் அதிகம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்ஸ்டாமார்ட் குறுகிய காலத்திலேயே நகர வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமடைந்தது.


குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் இன்ஸ்டாமார்ட் உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் டெலிவரி செய்யும் ஆப்கள் பெருமளவில் வளர்ச்சியடைந்தன.


ஆணுறை விற்பனையில் மும்பை நம்பர் 1


இந்நிலையில் முன்னதாக ஸ்விக்கி தளம் நடத்திய ஆய்வின்படி, இன்ஸ்டாமார்ட்  தளத்தில் மளிகைப் பொருள்கள் ஆர்டர்கள் கடந்த ஆண்டில் மட்டும் 16 மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.


அதிலும் பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், டெல்லி, சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்கள் இன்ஸ்டாமார்ட்டை தளத்தை பெருமளவு பயன்படுத்தியதாக பிரபல ஊடகமான இந்தியா டுடே தெரிவித்துள்ளது.


குறிப்பாக மும்பையில் உள்ள பயனர்கள் கடந்த  ஆண்டை விட 570 மடங்கு அதிகமாக ஆணுறைகளை இன்ஸ்டாமார்ட் தளம் மூலம் ஆர்டர் செய்துள்ளது இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.


அதேபோல், பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், டெல்லி, சென்னை ஆகிய நகரங்கள் சானிட்டரி நாப்கின்கள், மாதவிடாய் கப்கள், டாம்பான்கள் போன்ற பொருட்களை இன்ஸ்டாமார்ட் தளத்தில் அதிகம் ஆர்டர் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மெட்ரோ நகரங்கங்களின் ஆர்டர்கள் பற்றிய இன்ன பிற தகவல்கள் பின்வருமாறு:



  • கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் ஐஸ்கிரீமின் தேவை 42 சதவீதம் உயர்ந்துள்ளது.

  • ஐஸ்க்ரீம்கள் பெரும்பாலும் இரவு 10 மணிக்கு மேல் தான் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

  • 5.6 மில்லியன் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் பாக்கெட்டுகள் கடந்த ஆண்டு இன்ஸ்டாமார்ட் மூலம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

  • ஹைதராபாத்தில் வசிப்பவர்கள் கோடை காலத்தில் சுமார் 27,000 ஃப்ரெஷ் ஜூஸ் பாட்டில்களை ஆர்டர் செய்துள்ளனர்.

  • 5 கோடி சொச்சம் முட்டைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

  • பெங்களூர், டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்கள் கடந்த ஆண்டில் சராசரியாக 60 லட்சம் முட்டைகள் ஆர்டர் செய்துள்ளன.

  • பெங்களூரு, மும்பை நகரங்கள் பால் பாக்கெட்டுகள் ஆர்டர் செய்வதில் முன்னணியில் உள்ளன. சோயா, ஓட்ஸ் பால் உள்ளிட்டவையும் பெங்களூருவில் அதிகம் விற்பனை ஆகியுள்ளன.

  • பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இரவு உணவின் போது போஹா மற்றும் உப்மா ரெடி-டு ஈட் வடிவத்தில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

  • கடந்த ஆண்டில் 62,000 டன் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

  • 12000 ஆர்டர்களுடன், ஆர்கானிக் பொருட்களை வாங்குபவர்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.

  • ஹைதராபாத், பெங்களூர் நகரங்களில் சேர்த்து கடந்த ஆண்டு 290 டன் பச்சை மிளகாய் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது” என்று கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.