கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத அளவுக்கு அமைந்துள்ள நிலையில், முடிவுகளின் முழு விபரம் பற்றி காணலாம். 


கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல்


224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்துக்கு தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மார்ச் 29 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மாநிலம் முழுவதும் தேர்தல் திருவிழா களைக்கட்டியது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக முதலமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் என பாஜக முழுவீச்சில் பிரச்சாரம் செய்தது. அதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிக்கார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி  மற்றும் பிரியங்கா காந்தி என முன்னணி காங்கிரஸ் பிரபலங்களும் கர்நாடகா முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 


இப்படியான நிலையில் தேர்தலுக்கு முந்தைய,பிந்தைய கருத்து கணிப்புகள் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்திருந்தது. அதேசமயம் பெரும்பான்மைக்கு தேவையான 113 தொகுதிகளில் வெற்றி என்பது கிடைக்காது. தொங்கு சட்டசபை தான் அமையும் என கூறப்பட்டது. இதற்கிடையில் மே 10 ஆம் தேதி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க சட்டமன்ற தேர்தலில் 73.19% வாக்குகள் பதிவாகியிருந்தது. 


வீழ்ந்த பாஜக.. எழுச்சி கண்ட காங்கிரஸ் 


வாக்கு எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. முதலில் எண்ணப்பட்ட தபால் ஓட்டில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் இடையே இழுபறி நீடித்தது. இதனைத் தொடர்ந்து மிஷின் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் காலை 11 மணி வரை இரு கட்சிகளும் மாறி, மாறி முன்னிலை வகித்தது. அதற்கு பிறகு நிலைமை தலைகீழாக மாற தொடங்கியது. ஆளும் பாஜக குறைவான தொகுதிகளில் முன்னிலை பெற தொடங்கியது. அதேசமயம் காங்கிரஸ் முன்னிலைப் பெற்ற தொகுதிகள் ஏற்றம் கண்டது. 


இறுதியாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின் படி, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களிலும், பாஜக 66 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் கல்யாண ராஜ்ய பிரகதி கட்சி ,  சர்வோதயா கர்நாடகா பக்ஷா ஆகிய கட்சிகள் ஒரு இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 


திருப்பி கொடுத்த காங்கிரஸ் 


மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்த 9 ஆண்டுகளில் நடந்த பெரும்பான்மையான தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. சில தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் வெற்றி பெற்றாலும், அங்கு பாஜக தனது அரசியல் சூழ்ச்சியை நிகழ்த்துவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இப்படியான நிலையில் தான் காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு பலமான அடியை திருப்பி கொடுத்துள்ளது. 


பெரும்பான்மை பெறாவிட்டாலும் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி வைத்து ஆட்சியை கைப்பற்றி விடவும் திட்டம் போடப்பட்டிருந்தாக கூறப்பட்டது. ஆனால் கூட்டணி வைத்தால் கூட ஆட்சிக்கு வர முடியாது என்கிற அளவுக்கு காங்கிரஸ் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.


கர்நாடகாவில் பிரதமர் மோடி தேர்தலுக்கு முன்பு 8 முறையும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு 7 நாட்களும் சுற்றுப்பயணம் செய்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பெங்களூருவில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு சுமார் 33 கிலோ மீட்டர் தூரம் திறந்த வாகனத்தில் ஊர்வலம் நடத்தியும் அவர் கட்சிக்கு ஆதரவு திரட்டினார். அப்படி இருந்தும் பாஜக தோல்வி அடைந்தது  கட்சிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.