நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. மேலும் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய மத்திய மாநில அரசுகள் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவில் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் கொடுத்து வரும் நிறுவனங்கள் எவை தெரியுமா?
ரிலையன்ஸ் நிறுவனம்:
குஜராத் நகரின் ஜாம் நகர் பகுதியில் அமைந்துள்ள ரிலையன்ஸ் எண்ணெய் நிறுவனம் ஆக்சிஜன் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தினமும் 700-1000 டன் மருத்துவ ஆக்சிஜனை தயாரித்து மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. இதற்கு முன்பாக ஜாம்நகர் நிறுவனத்தில் வெறும் 100 டன் மருத்துவ ஆக்சிஜன் தான் தயாரிக்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா சூழல் காரணமாக இது அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஐநாக்ஸ் நிறுவனம்:
இந்தியாவிலேயே அதிகளவில் ஆக்சிஜன் உற்பத்திய செய்யும் நிறுவனம் ஐநாக்ஸ் ஏர் நிறுவனம் தான். இந்த நிறுவனம் 700 டன் மருத்துவ ஆக்சிஜன் தயாரித்து வந்தது. அது தவிர தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜனையும் இந்நிறுவனம் தயாரித்து வந்தது. தற்போது கொரோனா சூழல் காரணமாக மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்நிறுவனமும் தினமும் 4500 டன் மருத்துவ ஆக்சிஜன் தயாரித்து வருகிறது. அத்துடன் இந்த அளவை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
ஜே.எஸ்.டபிள்யூ:
ஜே.எஸ்.டபிள்யூ என்ற எஃகு தயாரிக்கும் நிறுவனம் தொழிற்சாலை தேவைக்காக ஆக்சிஜன் தயாரித்து வந்தது. தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக இந்த நிறுவனமும் மருத்துவ ஆக்சிஜன் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் தினமும் 700 டன் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இவற்றில் மகாராஷ்டிராவிலுள்ள தொழிற்சாலையில் தற்போது 185 டன் ஆக்சிஜன் தயாரித்து வருகிறது. மேலும் தன்னுடைய கர்நாடகா மற்றும் தமிழ்நாடு தொழிற்சாலைகளில் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க தொடங்கியுள்ளது.
ஐஓஎல் மற்றும் பாரத் பெட்ரோலியம்:
இந்தியன் எண்ணெய் நிறுவனம் (ஐஓஎல்) மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்ற மத்திய எண்ணெய் நிறுவனங்களும் தற்போது ஆக்சிஜன் தயாரிக்க தொடங்கியுள்ளன. ஐஓஎல் நிறுவனம் தினமும் 150 டன் மருத்துவ ஆக்சிஜன் தயாரித்து வருகிறது. மேலும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 100 டன் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்து வருகிறது. இவை அனைத்தும் டெல்லி, பஞ்சாப்,ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
எஸ்.ஏ.ஐ.எல்:
இந்திய எஃகு தயாரிக்கும் நிறுவனமான (எஸ்.ஏ.ஐ.எல்)(SAIL) தன்னுடய ஆலைகளிலிருந்து மொத்தமாக 35ஆயிரம் டன் ஆக்சிஜனை கொடுத்து வருகிறது. ஒடிசாவின் ரூர்கேளா, சத்தீஸ்கரின் பீலை, ஜார்க்கண்டின் போகாரா, துர்காபூர் உள்ளிட்ட ஆலைகளிலிருந்து மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு மாநிலங்களுக்கு அனுப்பபட்டு வருகிறது.
விசாகப்பட்டினம் எஃகு ஆலை:
விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள எஃகு ஆலையிலும் தற்போது மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு உள்ள மூன்று இடங்களில் ஒரு இடத்தில் 600 டன் ஆக்சிஜனும், மற்ற இரு இடங்களில் 550 டன் ஆக்சிஜனும் உற்பத்திய செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எஃகு தொழிற்சாலைகளில் அதிகம் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வந்தது. கொரோனா காலத்திற்கு முன்பாக இந்தியாவில் ஒரு நாளைக்கு 700 டன் மருத்துவ ஆக்சிஜன் தான் தேவைப்பட்டது. கொரோனா முதல் அலையில் இந்த தேவை 3000 டன் ஆக இருந்தது. இதனால் ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த தேவையை பூர்த்தி செய்தனர். ஆனால் கொரோனா இரண்டாவது அலையில் இந்தியாவின் மருத்துவ ஆக்சிஜன் தேவை ஒருநாளைக்கு 9000 டன் ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தான் தற்போது இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்கள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் தினமும் 9000 முதல் 11000 டன் ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டு வந்ததாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் 90 சதவிகிதம் தொழிற்சாலைகளுக்கு தான் செல்லும் என்று அவை தெரிவிக்கின்றன. அதாவது எஃகு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு இந்த ஆக்சிஜன் செல்லும். மேலும் மருத்துவ ஆக்சிஜன் மற்றும் தொழிற்சாலை ஆக்சிஜன் பயன்பாட்டிற்கு ஒரு முக்கியமான வித்தியாசம் உள்ளது.
அதாவது மருத்துவ பயன்பாட்டிற்கு ஆக்சிஜன் சுத்தமாக 99% வரை இருக்க வேண்டும். ஆனால் தொழிற்சாலை பயன்பாட்டிற்கான ஆக்சிஜன் அந்த அளவிற்கு சுத்தமாக இருக்காது. இதனால் அதை மருத்துவ பயன்பாட்டிற்கு உடனடியாக பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.