இந்தியா - இலங்கை இடையே ஏர் பபுல் திட்டம் மூலம் விமானப் போக்குவரத்து தொடங்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. 


இது குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்," இந்த ஒப்பந்தத்தின் மூலம் தகுதியுடைய பயணிகள் அனைவரும் இருநாடுகளுக்கு இடையே பயணிக்க முடியும்" என்று தெரிவித்தது.  


கோவிட் 19 நோய் பாதிப்பு சூழ்நிலையில் வழக்கமான சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வணிக ரீதியிலான பயணிகள் சேவையை மீண்டும் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டு இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தும் தற்காலிக ஒப்பந்தம் ஏர் பப்பிள் ஒப்பந்தம் எனப்படுகிறது. அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், மாலத்தீவுகள், ஐக்கிய அமீரகம், கத்தார், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன் உள்ளிட்ட 28 நாடுகளுடன் சர்வதேச விமானப் போக்குவரத்து ஒப்பந்தங்களிலும் (ஏர் பப்பிள் ஒப்பந்தம்) இந்தியா கையெழுத்திட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   


வெளிநாடுகளில் இருந்து சர்வதேச விமானங்கள் மூலம் தமிழகத்துக்கு வருபவர்கள் 14 நாள் தங்கள் வீடுகளில் தனிமை சிகிச்சையில் கட்டாயமாக இருக்க வேண்டும். ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். நோய் அறிகுறி இருந்தாலோ, கோவிட் 19 பாதிப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டாலோ அந்தப் பயணிகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும். தொழில்முறை பயணமாக இருந்தாலும், 72 மணி நேரத்தில் திரும்புவதாக இருந்தாலும் தனிமைப்படுத்தல் விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப் படுகிறது.