கடந்தாண்டு நவம்பர் மாதம், பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் வீர் தாஸ், 'ஐ கேம் ஃப்ரம் டூ இந்தியாஸ்' என்ற பெயரில் விடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இது சமூகவலைதளத்தில் பேசுபொருளாக மாறியது.


வெளிநாட்டு மண்ணில் சொந்த நாட்டை சிறுமைப்படுத்தியதாக வீர் தாஸ் மீது டெல்லி காவல்துறையினரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.


இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நடைபெறவிருந்த அவரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. வீர் தாஸின் நிகழ்ச்சி "இந்து உணர்வுகளை புண்படுத்துகிறது, இந்தியாவை மோசமாக சித்தரித்து காட்டுகிறது" என வலதுசாரி அமைப்புகள் சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. இச்சூழலில், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வீர் தாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.






அந்த பதிவில், "தவிர்க்க முடியாத காரணங்களால் பெங்களூரு நிகழ்ச்சியை தள்ளி வைக்கிறோம். புதிய விவரங்கள் மற்றும் தேதிகள் விரைவில் வெளியிடப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக, வீர் தாஸின் நிகழ்ச்சி குறித்து இந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பினர் வயாலிகாவல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மல்லேஸ்வரத்தில் உள்ள சௌடியா நினைவு மண்டபத்தில் அவரின் நிகழ்ச்சி நடைபபெறவிருந்தது.


புகார் அளித்தது குறித்து இந்து ஜனஜக்ருதி சமிதி அமைப்பின் செய்தி தொடர்பாளர் மோகன் கவுடா கூறுகையில், "அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள ஜான் எஃப் கென்னடி மையத்தில் பெண்கள், நமது பிரதமர் மற்றும் இந்தியாவை இழிவுபடுத்தும் அறிக்கைகளை வெளியிட்டு தேசத்தை முன்னதாக அவர் இழிவுபடுத்தினார். 


இந்தியாவில் பெண்களை பகலில் வணங்குகிறோம். இரவில் பாலியல் வன்கொடுமை செய்கிறோம் என்று கூறியிருந்தார். இது போன்ற சர்ச்சைக்குரிய நபரை பெங்களூரு போன்ற வகுப்புவாத பிரச்னைக்குரிய பகுதியில் நிகழ்ச்சி நடத்த அனுமதிப்பது சரியல்ல. 


கர்நாடகா ஏற்கனவே வகுப்புவாத சம்பவங்களால் பல சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கை குலைக்கும் இதுபோன்ற நிகழ்வுகளை அனுமதிக்க கூடாது. இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.


"நான் இருவேறு இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன். உலகிலேயே 30 வயதுக்கு கீழான வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் 150 ஆண்டு கால பழமையான சிந்தனைகளை கொண்ட 75 வயது தலைவர்களின் பேச்சை கேட்கும் இந்தியா. 


பகல் நேரத்தில் போற்றுதலுக்குள்ளாகும் பெண்கள் இரவு நேரத்தில் கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளாவார்கள். இம்மாதிரியான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்" என வீர் தாஸ் தனது நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.