நாடு முழுவதும் நாளை விநாயாகர் சதுத்தி விழா கொண்டாடப்படும் நிலையில் புதுச்சேரியில் சிறைக்கைதிகள் கைவண்ணத்தில் உருவான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 200க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள சிறை கைதிகளுக்கு புதுச்சேரி அரவிந்தர் சொசைட்டி தொண்டு நிறுவனம் மூலம் மறுவாழ்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.



இந்நிலையில் சிறைக் கைதிகள் பயிற்சி பெற்று தயாரித்த வண்ணமயமான விநாயகர் சிலைகள் தற்போது புதுச்சேரி உள்ளாட்சித் துறை வளாகத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அரை அடி முதல் 2 அடி வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு உள்ளன. விநாயகர் சிலை விற்பனையை உள்ளாட்சித்துறை இயக்குநரும், சிறைத்துறை ஐஜியுமான ரவிதீப் சிங் சாகர் இன்று தொடங்கி வைத்தார்.


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரி சிறைக் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் கைத்தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் கைதிகள் நல்ல பொருட்களை உற்பத்தி செய்து விற்பனைக்கு வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அரவிந்தர் சொசைட்டியின் புதிய நம்பிக்கை திட்டத்தின் கீழ் இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கைதிகளுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கு இப்பயிற்சி பயனுள்ளதாக அமைகிறது.



 


தொடர்ந்து சிறைக்கைதிகளுக்கு கவுன்சிலிங் வழங்குவதோடு, இலவச பல் மருத்துவ முகாம், உடல் நிலை, மனநிலை பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. அவர்களது எதிர்கால வாழ்க்கை சிறப்பதற்கு இப்பயிற்சிகள் பயனுள்ளதாக அமையும். பல்வேறு பொருட்களை தயாரித்து வழங்க அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. சிறைக்கைதிகள் தயாரித்த விநாயகர் சிலைகள் 150 முதல் 1000 ரூபாய் வரை மக்களை ஈர்க்க கூடிய வடிவங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்களும் வாங்கி அவர்களுக்கு உதவி செய்ய முடியும்.



சிறைக் கைதிகளுக்கு மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு தொடர்ந்து கவுன்சிலிங், நூலகம், இயற்கை வேளாண்மை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலையில் கைதிகள் தற்கொலை முயற்சி சம்பவத்துக்குக் காரணம், புதுச்சேரி சிறைக்கு வரும் விசாரணைக் கைதிகள் சிலர் மனரீதியில் பாதித்து அந்த முயற்சியில் ஈடுபடுகின்றனர்.


இந்திய அளவில் சிறைகளில் இந்தப் பிரச்சினை உள்ளது. அதனைத் தவிர்க்க கவுன்சிலிங் வழங்குகிறோம். அவர்கள் கரோனா பாதிப்பு, குடும்பச் சூழல் காரணமாக தவறான முடிவை எடுக்கின்றனர். கோஷ்டி பிரச்சினை ஏதும் இல்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது எனத் தெரிவித்தார்.