KV Viswanathan: மத்திய அரசுக்கு பரிந்துரைத்த கொலிஜியம்.. உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்நாட்டை சேர்ந்த கே.வி. விஸ்வநாதன்..!

கோவை சட்ட கல்லூரியில் சட்ட பட்டப்படிப்பை பயின்ற கே.வி.விஸ்வநாதன், கடந்த 1988 ம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார்.

Continues below advertisement

ஆந்திரப் பிரதேச தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மூத்த வழக்கறிஞர் கே.வி. விஸ்வநாதன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் நேற்று பரிந்துரை செய்துள்ளது. 

Continues below advertisement

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, தலைமை நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் தகுதி மற்றும் நேர்மை ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்த பிறகே மிஸ்ரா மற்றும் விஸ்வநாதன் ஆகியோரின் பதவிக்கு பரிந்துரைக்க முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா:

 நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 13 ம் தேதி ஆந்திரப் பிரதேச தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். முன்னதாக இவர், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி மற்றும் செயல் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார்.

நீதிபதி கே.வி விஸ்வநாதன்:

கோவை சட்ட கல்லூரியில் சட்ட பட்டப்படிப்பை பயின்ற கே.வி.விஸ்வநாதன், கடந்த 1988 ம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். பல்வேறு துறை சார்ந்த வழக்குகளில் ஆஜராகி தனது திறமையை நிரூபித்தார். நாடு முழுவதும் அதிகமாக பேசப்பட்டு வந்த ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கோரும் வழக்கில், மனுதாரர் சார்பில் ஆஜராகி கே.வி. விஸ்வநாதன் வாதாடி வருகிறார். 

உச்சநீதிமன்றம் 34 நீதிபதிகளை கொண்டதாக இருக்கும். இருப்பினும், வருகின்ற ஜூலை 2வது வாரத்தில் நீதிபதிகள் கே.எம். ஜோசப், அஜய் ரஸ்தோகி, கிருஷ்ணா முராரி மற்றும் வி. ராமசுப்ரமணியன் ஆகியோர் ஓய்வுபெற இருக்கின்றனர். மேலும், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ரவீந்திர பட் இந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற உள்ளனர்.

அதனடிப்படையில், கொலீஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால், வருகின்ற 2030 ஆண்டு ஆகஸ்டு  மாதம் 11 ம் தேதி நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஓய்வுபெறும்போது, தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதி கே.வி விஸ்வநாதன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்று, 2031 ம் ஆண்டு மே 25ம் தேதி வரை பதவி வகிப்பார். 

இது மட்டும் சாத்தியமானால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் 3வது தமிழர் என்ற பெருமையை கே.வி விஸ்வநாதன் பெறுவார். இதற்கு முன்னதாக பதஞ்சலி சாஸ்திரி மற்றும் பி.சதாசிவம் ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தனர். 

Continues below advertisement
Sponsored Links by Taboola