மும்பையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் 99 கிராம் போதை பொருள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதை பொருளை ஸ்லீப்பரில் மறைத்து வைத்து எடுத்து சென்ற நைஜீரியா நாட்டை சேர்ந்தவரையும் அவருக்கு சப்ளை செய்த நபரையும் மும்பை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 


கோடி கணக்கில் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்:


லைபீரியாவிலிருந்து அனுப்பப்பட்ட போதை பொருளை மும்பை சுங்க பிரிவின் சிறப்பு புலனாய்வு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள், நேற்று  பறிமுதல் செய்தனர்.


தானே மாவட்டத்தின் பத்லாபூர் பகுதியில் உள்ள முகவரிக்கு அனுப்பட்ட பார்சலை அதிகாரிகள் இடைமறித்து, மூன்று ஜோடி செருப்புகளில் மறைத்து வைத்திருந்த 99 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கோகோயினை பறிமுதல் செய்தனர். மூன்று நாள்களாக அதிரடி சோதனை தொடர்ந்த நிலையில், போதை பொருள் சப்ளையரையும் நைஜீரிய நாட்டவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.க்ஷ


கைது செய்தது எப்படி?


போதை பொருளை பறிமுதல் செய்த பிறகு, அந்த பார்சல் யாருக்கு அனுப்பப்பட்டதோ அந்த நபரை அதிகாரிகள் தொடர்பு கொண்டுள்ளனர். பின்னர், கொரியர் கம்பெனி ஊழியர்கள் போல நடித்து அவரை பிடிக்கும் முயற்சி செய்தனர். பத்லாபூருக்கு வந்து பார்சலை பெற்று கொள்ளும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.


அதன்படியே, பார்சலை பெற வந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், நவி மும்பையில் இருந்து நைஜீரிய நாட்டை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். இருவரும் மீது என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


மும்பை விமான நிலையத்தில் தொடரும் கடத்தல் சம்பவங்கள்:


போதை பொருள்கள் கடத்தப்படுவது, மும்பை விமான நிலையத்தில் தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் கூட,  100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட 16 கிலோகிராம் ஹெராயினை வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக கானாவைச் சேர்ந்த பயணி மற்றும் பெண் ஒருவரை கைது செய்தனர்.


ஆப்பிரிக்க நாடான மலாவியில் இருந்து கத்தார் வழியாக மும்பைக்கு பயணித்த பயணி ஒருவர் போதைப்பொருள் கடத்த முயல்வதாக கிடைத்த தகவலின் பேரில் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் மும்பை பிரிவு சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் சோதனை நடத்தினர்.


திட்டத்தின் ஒரு பகுதியாக, வருவாய் புலனாய்வு இயக்குனரக அலுவலர்கள் குழு விமான நிலையத்தில் நிலைநிறுத்தப்பட்டனர். சந்தேகத்திற்குரிய பயணி ஒருவரை இடைமறித்து சோதனை செய்தனர். அதிகாரிகள் அவரது பொருள்களை சோதனை செய்ததில், டிராலி பைகளில் துவாரங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது.