கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப்பெறுதல் அறிவிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.


கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது.  புதிதாக 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது மக்கள் தங்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கி வாசலில் நீண்ட வரிசைகளில் நின்றனர். இதனால் வயதானவர்கள், திருமணம் போன்ற விசேஷங்களை வைத்திருந்தவர்கள் ஆகியோர் பெரிதும் அவதி அடைந்தனர். இந்த விவகாரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செப்டம்பர் 30-ம் தேதி முதல் செல்லாது என்று நேற்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்! கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்! 2 ஆயிரம் ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கை' என தெரிவித்துள்ளார்.






முன்னதாக, 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8- ஆம் தேதி இரவு, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அதன்படி நாடு முழுவதும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளுக்கு பதில், புதிய ரூ.500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தவர்கள் வங்கிகள் மூலம் புதிய நோட்டுக்களை பெற்றுக் கொள்ள மத்திய அரசு கால அவகாசம் வழங்கியது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.  தொடரப்பட்ட வழக்கை கடந்த 2016 நவம்பர் 15 அன்று விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்ற  தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், தலைமையிலான அமர்வு, பணமதிப்பு நீக்கத் திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கம் பாராட்டுக்குரியது என்றாலும், அதனால் மக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்கள் குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.