ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் படுதோல்வியைச் சந்தித்தது. இந்தநிலையில், ஆந்திர சட்டமன்றக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக தான் அவமானப்படுத்தப்பட்டு வருவதாகவும், இத்தனை நாட்கள் தான் அமைதியாக இருந்ததாகவும் கூறினார்.


ஆனால், இன்று தனது மனைவியை குறிவைத்துள்ளதாகவும், தான் மானத்துடன் வாழ்பவன், இனி என்னால் இதற்குமேல் தாங்கிக்கொள்ள முடியாது என்று கூறி கண்ணீர்விட்டு அழுதார். ஒரு முன்னாள் முதல்வர் சட்டமன்ற கூட்டத்திலே தனது மனைவியை எதிர்க்கட்சியினர் அவதூறாக களங்கப்படுத்துவதாக கூறி அழுததுடன், இனி முதல்வராகதான் சட்டமன்றத்திற்குள் திரும்புவேன் என்ற நிகழ்வு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




இந்த நிலையில், இதுதொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகனமோகன் ரெட்டி இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள கருத்தில் கூறியிருப்பதாவது, “ சந்திரபாபு நாயுடு கண்ணீர் வடித்தது ஒரு நாடகம். ஆம். சந்திரபாபு நாயுடுவின் நிலையும், அவர் விரக்தியில் இருக்கிறார் என்பது எனக்கு மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். மாநில மக்கள் அவரை வெளிப்படையாக நிராகரித்துள்ளனர். அவரது சொந்த தொகுதியான குப்பம் தொகுதியில்கூட, நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு மக்களின் நிராகரிப்பைச் சந்தித்தார்.




சந்திரபாபுநாயுடு அனைத்திலும் அரசியல் மைலேஜ் பெற மட்டுமே முயற்சிக்கிறார். இது மிகவும் துரதிஷ்டவசமானது. அப்போது, நான் சபைக்குள் இல்லாவிட்டாலும் அவரது நாடகம் அனைத்து கண்களுக்கும் தெரிந்தது.


அவரது குடும்பத்தை பற்றி எங்கள் தரப்பில் பேசியதற்கான எந்த குறிப்பும் இல்லை. ஆனால், என்னுடைய கொல்லப்பட்ட மாமா, தாய் மற்றும் சகோதரி உள்பட எனது குடும்ப உறுப்பினர்கள் பற்றி சந்திரபாபுவே பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் உள்ள பதிவுகள் அதை தெளிவாக நிரூபிக்கின்றன.”


இவ்வாறு அவர் கூறினார்.  


ஜெகன்மோகன் ரெட்டி கூறியது மட்டுமின்றி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய எம்.எல்.ஏ.வான நடிகை ரோஜாவும் சந்திரபாபு நாயுடுவை விதி விட்டுவைக்கவில்லை. இனி முதல்வராகதான் சட்டமன்றத்திற்கு திரும்புவேன் என்று கூறிய சந்திரபாபு நாயுடுவால் இனி சட்டசபைக்கு திரும்பவே முடியாது என்று கூறியிருந்தார். மேலும், சந்திரபாபு நாயுடு அன்று முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவுக்கு செய்தது இன்று அவருக்கு திரும்பியுள்ளது என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 பேஸ்புக் பக்கத்தில் தொடர


 ட்விட்டர் பக்கத்தில் தொடர


 யூட்யூபில் வீடியோக்களை காண