முதலமைச்சரின் பெண் குழந்தைகளின் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்படும் பயனாளிகளுக்கு ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்பது வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசும் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று தெரிவித்து வருகிறது. உதவித்தொகை , மின்சார இணைப்பு, ஓவ்வூதிய திட்டம் உள்ளிட்டவைகளுக்கு ஆதார் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.
தமிழ்நாடு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இனி ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசிதழின் விவரம்:
அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் இனிவரும் புதிய பயனாளர்களுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சமூக நலத் துறை சார்பில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50 ஆயிரம் வைப்புநிதியாக தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனத்தில் வைக்கப்படுகிறது. இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்பு நிதி செலுத்தப்படுகிறது. அந்த வைப்பு நிதிக்கான ஆவணம், குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்பட்டு வருவது வழக்கம்.
இப்போது, மத்திய அரசு விதிகள்படி, திட்டப் பயனாளிகள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.எனவே, இந்த திட்டத்தின் கீழ் பயனடைவோர், ஆதார் எண்ணை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை இதுவரை ஆதார் எண் பெறப்படாத நிலையில், பெற்றோர் மூலம் ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து, அதைக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம், கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை,பான் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, புகைப்படத்துடன் கூடியகிசான் பாஸ்புக், ஓட்டுநர் உரிமம், தாசில்தார் உள்ளிட்ட சான்றொப்ப அதிகாரியால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ்அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து, விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அரசிதழில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
மாநில அரசின் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்
தமிழக அரசால் கடந்த 1992-ம் ஆண்டிலேயே முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். இந்தத் தொகை, முதலீட்டு தொகையாக சமூகநலத் துறையின் சார்பில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் செலுத்தப்படும். பெண் குழந்தையின் 18 வயதுக்குப் பிறகு வட்டியுடன் கூடிய முதிர்வுத் தொகை வழங்கப்படும்.
தகுதிகள் என்ன?
* இத்திட்டத்தின் பயனாளிகளுடைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
* விண்ணப்பிக்கும்போது குழந்தைகளின் பெற்றோர் தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும்.
* குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை அல்லது இரு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும்.
* ஆண் குழந்தை இருக்கக் கூடாது, எதிர்காலத்தில் ஆண் குழந்தையை தத்தெடுக்கவும் கூடாது.
* 40 வயதுக்குள் பெற்றோர் குடும்பக் கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும்.