பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த மாணவி ஒருவர் தேள் கொட்டியதால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மாணவியை கொட்டிய தேள்:


சத்தீஸ்கர் மாநிலம் பீமெதாரா மாவட்டத்தில் உள்ள பந்தி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 8 வயதான மாணவி திவ்யா மந்தாவி என்ற சிறுமி 2ம் வகுப்பு படித்துவருகிறார். வகுப்பு இடைவேளையின் போது பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது, அவரை தேள் கொட்டியுள்ளது. வலியால் அலறித்துடித்த சிறுமியை முதலுதவிக்காக பந்தாதி கிராமத்தின் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் பீமெதாரா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். சிறுமியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கவே மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே மாணவி உயிரிழந்தார்.


இரங்கல் தெரிவித்த முதலமைச்சர்:


பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த மாணவி தேள் கடித்து உயிரிழந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மாணவியின் இறப்பிற்கு அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் உத்தரவின் பேரில் பீமெதாரா மாவட்ட கல்வி அலுவலர் மாணவியின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை  வழங்கினார். மேலும் 4 லட்ச ரூபாய் நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மாணவியின் உயிரிழப்பிற்கு பள்ளியில் சுத்தம் இல்லாததே காரணம் என்றும், ஆசிரியர்களின் மெத்தனப் போக்கே இதற்குக் காரணம் என்றும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இது முதல்முறை அல்ல:


சத்தீஸ்கரில் இதுபோன்று விஷத்தன்மை கொண்ட உயிரினங்களால் மாணவிகள் உயிரிழப்பது இது முதல்முறை அல்ல. கடந்த 2019ம் ஆண்டு ஜஷ்பூர் மாவட்டத்தில் உள்ள டட்கேலா தொடக்கப்பள்ளியில் மாணவிகள் படித்து வந்துள்ளனர். அப்போது ஒரு மாணவியின் வாயில் நுரை தள்ளியுள்ளது. பள்ளி ஆசிரியர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த சயமத்தில் மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாததால் அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமலேயே இறந்துள்ளார். பெற்றோர்கள் விரைந்து வந்து இது குறித்து தகவல் சொன்னபோது மற்றொரு மாணவியின் வாயிலும் நுரைதள்ளியுள்ளது. அவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது சிகிச்சைப்பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். பாம்பு கடித்த 3ம் வகுப்பு மாணவிகளில் 2 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து விசாரிக்க குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டது.


அதேபோல ஜஷ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமப் பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பு மாணவன் ஒருவர் பாம்பு கடித்து கடந்த 2021ம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.