மகாராஷ்ட்ராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்குக் கடந்த 2004, 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளின் தேர்தல் வேட்பு மனுக்களின் அடிப்படையில் வருமான வரித்துறை பல்வேறு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது.
மகாராஷ்ட்ராவின் சிவ சேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அரசு கலைக்கப்பட்டு, ஏக்நாத் ஷிண்டே பதவியேற்ற அதே நாளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த நோட்டீஸ்களை `காதல் கடிதங்கள்’ எனக் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் மராத்தி மொழியில் பதிவிட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், `மத்திய அரசின் கண்ணோட்டத்திற்கு மாறான கண்ணோட்டம் கொண்டிருப்பவர்களை அச்சுறுத்துவதற்காக இந்தக் கருவி பயன்படுத்தப்படுகிறது. வருமான வரித்துறையினரிடம் இருந்து அப்படியான காதல் கடிதத்தைப் பெற்றிருக்கிறேன். கடந்த 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் இன்று கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றன’ எனக் கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மகேஷ் பரத் டபாசே, `இது யதேச்சையாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் இருக்கிறதா?’ என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கும் காலகட்டத்தைக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
இவை ஒருபக்கம் இருக்க, சிவ சேனா கட்சியின் எம்.பியும், செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ரௌத் பண மோசடி விவகாரம் தொடர்பாக இன்று அமலாக்கத்துறை முன்பாக ஆஜராக உத்தவிடப்பட்டுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு, இதே போன்ற வருமான வரித்துறை நோட்டீஸ்களைப் பெற்றுள்ளார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார். கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், `அவர்களுக்குச் சில நபர்கள் மீது அதிக பிரியம் உண்டு. எனவே எனக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது’ எனக் கூறியிருந்தார்.
முந்தைய தேர்தல்களின் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான நோட்டீஸ்களைத் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மட்டுமின்றி, அவரது மகள் சுப்ரியா சூலே, மகாராஷ்ட்ரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மகா விகாஸ் அங்காடி கூட்டணியின் இரு பெரும் கட்சிகளின் தலைவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் இது அதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது/
கடந்த 2021ஆம் ஆண்டு, வருமான வரித்துறை சார்பில், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மகாராஷ்ட்ராவின் முன்னாள் முதல்வருமான அஜித் பவாருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போதும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், `அஜித் வீட்டிற்குச் சில அரசு விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். நான் அதற்காக கவலைப்படவில்லை. எனக்கும் அமலாக்கத்துறை சார்பாக கடந்த காலத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் பாஜக தலைமையிலான அரசுக்கு மகாராஷ்ட்ரா மக்கள் பாடம் புகட்டினார்கள்’ எனக் கூறியிருந்தார். மேலும், அப்போதைய வருமான வரித்துறை சோதனைகளைப் பழிவாங்கும் முயற்சி எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.