உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான சிறப்பு நீதிமன்ற அமர்வு டெல்லியில் தேவைப்பட்டால் 2 நாள்கள் ஊரடங்கு பிறப்பிக்குமாறு பரிந்துரை செய்துள்ளனர். இந்தச் சிறப்பு நீதிமன்ற அமர்வு மத்திய அரசையும், டெல்லி மாநில அரசையும் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொண்டு காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தலைநகரின் காற்று அளவின் தன்மையை சராசரி நிலைக்குக் கொண்டு வருமாறு உத்தரவிட்டுள்ளனர்.


`இந்த நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை உணர்கிறீர்களா? மக்கள் தங்கள் வீடுகளிலும் முகக் கவசம் அணியும் நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டு நாள்கள் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யுங்கள். டெல்லியின் காற்று மாசு அதிகரிப்பு அடுத்த இரண்டு, மூன்று நாள்களில் இன்னும் மோசமாக வாய்ப்புள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீங்கள் விரைவில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அடுத்த இரண்டு நாள்களில் நமது நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை உணர்த்துமாறு நடவடிக்கைகள் இருக்க வேண்டும். இந்த நிலைமையை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள் என்று சொல்லுங்கள்’ என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தாவிடம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கடுமையாகக் கூறினார். 



டெல்லி காற்று மாசு


 


துஷார் மேத்தா இதை ஆமோதித்ததோடு, `காற்று நிலையை சற்றே சரி செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன’ என்று கூறியதோடு அவசர கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க நவம்பர் 13 அன்று ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளதாகவும் கூறினார். 


மற்றொரு நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட், `பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் சாலைகளில் இறங்கி பள்ளிக்குச் செல்கிறார்கள். நீங்கள் குழந்தைகளைக் காற்று மாசு, பெருந்தொற்று, டெங்கு ஆகியவற்றிற்கு இலக்கு ஆக்குகிறீர்கள்’ என்று அரசைக் கடுமையாக விமர்சித்தார். 


டெல்லி அரசுத் தரப்பு வழக்கறிஞர் ராகுல் மேத்தா டெல்லியின் காற்று மாசு பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் விவசாயிகளால் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகளே காரணம் என்று கூறினார். மேலும் கடந்த 5, 6 நாள்களாக பஞ்சாப் மாநிலத்தில் பயிர்க் கழிவுகளை விவசாயிகள் எரித்து வருவதாகத் தெரிவித்தார். 


`நீங்கள் முதலில் டெல்லியைக் கட்டுப்படுத்துங்கள். நீங்கள் கட்டிய காற்று மாசைக் கட்டுப்படுத்தும் டவர்கள் வேலை செய்கின்றனவா?’ என்று டெல்லி அரசைக் கடுமையாகச் சாடினார் தலைமை நீதிபதி என்.வி.ரமணா. 



பஞ்சாப் பயிர்க் கழிவுகள் எரிப்பு


 


மற்றொரு நீதிபதியான சூர்யா கண்ட், `அனைவரும் விவசாயிகளையே குறை சொல்கிறீர்கள். பட்டாசுகள் மீதான தடை என்ன ஆனது? கடந்த 5, 6 நாள்களாக என்ன நடந்து கொண்டிருக்கிறது? டெல்லி காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? இது அவசர காலம். அவசரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என்று டெல்லி அரசைக் கடிந்து கொண்டார். 


மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா விவசாயிகளைக் குறை சொல்வது அரசின் நோக்கம் எனவும், அவர்கள் மட்டுமே காற்று மாசுக்குக் காரணம் என்று குறை சொல்லவில்லை எனவும் கூறி, இந்தப் பிரச்னை அரசியல் விவகாரங்களுக்கு அப்பாற்பட்டது எனவும், இதில் பழிபோட்டு விளையாட தேவை இல்லை என்று தெரிவித்தார். 


இந்த வழக்கு வரும் நவம்பர் 15 அன்று விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, டெல்லி மாநில அரசு காற்று மாசைக் கட்டுப்படுத்த அவசர கால நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதி அளித்துள்ளன.