உச்சநீதிமன்றத்தில் உள்ள தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் காப்பகத்தின் (NJMA) திறப்பு விழாவில், இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், செயற்கை நுண்ணறிவு (AI) வழக்கறிஞருடன் இன்று உரையாடினார்.
AI வழக்கறிஞர்:
அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த தலைமை நீதிபதி, அங்கு இருந்த AI வழக்கறிஞரிடம் கேட்டார், மரண தண்டனையானது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு செயற்கை நுண்ணறிவு AI வழக்கறிஞர் பதிலளித்ததாவது, “ ஆம் மரண தண்டனை இந்தியாவின் அரசியலமைப்பிற்கு உட்பட்டது. இது உச்ச நீதிமன்றத்தால், அரிதான வழக்குகளில் வழங்கப்படுகிறது. மிகவும் கொடூரமான குற்றங்களில், மரண தண்டனையானது வழங்கப்படுகிறது என AI வழக்கறிஞர் பதிலளித்தது.
இதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வியப்புடன் பார்த்தார். இந்த வீடியோ காட்சியானது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பத்தின் வழக்கறிஞர் துறையிலும் காலூண்றியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற காற்று:
நவம்பர் 10-ம் தேதி ஓய்வு பெறவுள்ள தலைமை நீதிபதி சந்திரசூட் பேசுகையில், இந்த அருங்காட்சியகம் இளைய தலைமுறையினருக்கு ஒரு சிறப்பான இடமாக மாற வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறினார்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த இளைய தலைமுறையினர், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் அருங்காட்சியகத்திற்குச் சென்று, நீதிமன்ற காற்றை சுவாசிப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அனைத்து வழக்கறிஞர்களும் அருங்காட்சியகத்தை பார்வையிட வருமாறு தலைமை நீதிபதி சந்திரசூட் கேட்டுக் கொண்டார்.
ஆதிக்கம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு:
செயற்கை நுண்ணறிவானது, தற்போது பெரும்பாலான துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருவதை பார்க்க முடிகிறது. தொழில்நுட்ப துறை முதல் , வீட்டு கதவு வரை செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை பார்க்க முடிகிறது. செயற்கை நுண்ணறிவானது, வேலையை எளிமையாகவும் மற்றும் வேலை பளுவையும் குறைக்கிறது என்றே சொல்லலாம். ஆனால், இதனால், மக்களின் வேலைவாய்ப்பு குறையும் சூழல் ஏற்படுவதையும் சில துறைகளில் பார்க்க முடிகிறது.
இன்னும் வரும் காலத்தில், செயற்கை நுண்ணறிவு பயன்பாடானது, மேலும் விரிவடைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, அந்த துறை ரீதியாக வேலைவாய்ப்பு அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கணினி பயன்பாடு வந்த போது, மக்களின் வேலைவாய்ப்பு குறையும் என கூறப்பட்டது, ஆனால் , கணிணியினால் வேலைவாய்ப்பு கிடைத்தது. அதுபோல, செயற்கை நுண்ணறிவு துறையில், வருங்காலத்தில் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.