வெடிகுண்டு மிரட்டல் குறித்து புரளி கிளப்புபவர்கள் விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு எச்சரித்துள்ளார். பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் முன்னுரிமையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


கடந்த சில நாள்களாகவே விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர் கதையாகி வரும் நிலையில், ஒரே வாரத்தில் மொத்தம் 100 விமானங்களுக்கு மேல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


100க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: 


கர்நாடகாவின் பெலகாவி விமான நிலையத்துக்கு நேற்று முன்தினமும், நேற்றும் இரண்டு வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலம் வந்தன. காவல்துறையினரும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரும் விமான நிலையத்தை சோதனையிட்ட பின்னர் அது தவறான தகவல் என உறுதி செய்யப்பட்டது.


 






கடந்த வாரத்தில், டெல்லி-சிகாகோ ஏர் இந்தியா விமானம், தம்மம் - லக்னோ இண்டிகோ விமானம், அயோத்தி-பெங்களூரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், தர்பங்காவிலிருந்து மும்பைக்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் (SG116), பாக்டோக்ரா பெங்களூரு (QP 1373) அலையன்ஸ் ஏர் விமானம், அமிர்தசரஸ்-டேராடூன்-டெல்லி விமானம் (9I 650), ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (IX 684), மதுரை - சிங்கப்பூர் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.


மத்திய அமைச்சர் அதிரடி:


இந்த நிலையில், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, "வெடிகுண்டு மிரட்டல்கள் புரளியாக இருக்கும் பட்சத்தில், விமான போக்குவரத்து துறை மற்றும் விமான நிறுவனங்கள் பின்பற்றும் கடுமையான நெறிமுறை ஒன்று உள்ளது. இதுபோன்ற மிரட்டல்கள் வரும்போது பதற்றமான சூழலாகிறது. எனவே, நாம் பின்பற்ற வேண்டிய ஒரு சர்வதேச நடைமுறை உள்ளது.


மிரட்டல்கள் வர தொடங்கியதில் இருந்து சம்பந்தப்பட்டவர்களுடன் பல சந்திப்புகள் நடத்தப்பட்டன. விமான (பாதுகாப்பு) விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இதுபோன்ற மிரட்டல்களை விடுக்கும் நபர்கள் அடையாளம் காணப்பட்ட பிறகு, அவர்கள் விமானத்தில் செல்ல தடை விதிக்கப்படும்" என்றார்.