டெல்லியில் போலியான அடையாள ஆவணங்களுடன் துறவி வேடத்தில் வாழ்ந்து வந்த சீனாவைச் சேர்ந்த பெண்ணை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.


டெல்லியின் (வடக்கு) மஜ்னு கா டிலா பகுதியில் துறவி போன்று நீளமான சிவப்பு நிற அங்கி அணிந்திருந்தார். முடியும் அதிக நீளம் இல்லாமல் அவர் வெட்டியிருந்தார். அவரை சந்தேகத்தின்பேரில் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். டெல்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு கேம்பசில் திபெத்திய அகதி முகாம் இருக்கும் பகுதியில் இருந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்தப் பகுதி பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் இருந்து வருகிறது.


இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:


சந்தேகத்தின் பேரில் துறவி வேடத்தில் இருந்த பெண்ணை கைது செய்து விசாரித்ததில் டோல்மா லாமா என்ற பெயரில் நேபாள குடியுரிமையை வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து அதை பறிமுதல் செய்தோம். எனினும், வெளிநாட்டவர் பிராந்தியப் பதிவு அலுவலகத்தில் இவர் குறித்து விசாரித்தபோது, அவர் சீனாவைச் சேர்ந்தவர் என்பதும் 2019-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தவர் என்பதும் தெரியவந்தது.


சீனாவின் ஹைனன் மாகாணத்தைச் சேர்ந்தவரான இவரது நிஜப் பெயர் கை ருவோ. இன்னொருவர் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து வாழ்ந்து வந்த இவருக்கு எதிராக சட்டப் பிரிவு 120 பி (குற்றவியல் சதி), 419  (தனிப்பட்ட முறையில் ஏமாற்றுதல்), 420 (ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்துக்களை வழங்குதல்), 467 (போலி ஆவணங்களை உருவாக்குதல்), மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் பிற தொடர்புடைய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.