நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை இன்று இரண்டு லட்சத்தை தாண்டியது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தினசரி தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளன.


 


இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.




இதுகுறித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், வார இறுதி நாட்களில் செயல்பட்டு வந்த மார்க்கெட்டுகள் இனி வார நாட்களில் செயல்படும். முழு ஊரடங்கு நாளில் திரையரங்குகள், மால்கள், ஹோட்டல்கள் செயல்படாது. ஹோட்டல்களில் பார்சல் வழங்க அனுமதிக்கப்படும். வார இறுதி நாட்களான சனி, ஞாயிறன்று உணவகங்களில் டெலிவரி சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்” என்று கூறினார்.


 


கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதால் டெல்லியில் தினசரி பாதிப்பு 17 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. இதன்காரணமாக, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்துள்ளார்.