உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் பரிந்துரை செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த என்.வி.ரமணா, கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றதையடுத்து நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பொறுப்பேற்றார். தற்போதைய தலைமை நீதிபதிக்கு 74 நாட்கள் மட்டுமே பதவிக்காலம் உள்ளது. இந்த சூழலில்தான், நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட்டை நியமிக்க தலைமை நீதிபதி லலித் பரிந்துரைத்துள்ளார்.
பள்ளி, கல்லூரி வாழ்க்கை :
டி.ஒய். சந்திரசூட்டின் முழுப்பெயர் தனஞ்ஜெயா சந்திரசூட். இவர் 1959ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பிறந்தவர். அவரது தந்தை யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட். இந்தியாவிற்காக நீண்ட காலம் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட். டி.ஒய்.சந்திரசூட்டின் தாய் பிரபா இசைக்கலைஞர். டி.ஒய்.சந்திரசூட் மும்பையில் உள்ள கதிட்ரல் ஜான் கோனன் பள்ளியிலும், டெல்லியில் உள்ள செயின்ட் கொலும்பா பள்ளியிலும் படித்தார்.
பொருளாதாரத்திலும், கணிதத்திலும் டெல்லியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1982ம் ஆண்டு டெல்லி சட்டப்பல்கலைகழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். பின்னர், 1983ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைகழகத்தில் சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.
வழக்ககறிஞர் பயிற்சி :
ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் ஜோசப் எச்.பீலே பரிசு வென்றுள்ளார். 1986ம் ஆண்டு சட்டப்படிப்பில் முனைவர் பட்டம் பெற்றார். டெல்லியில் சட்டக்கல்லூரியில் பயின்றபோதே ஜூனியர் வழக்கறிஞராக பயிற்சி பெற ஆரம்பித்தார். ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் சட்டம் பெற்ற பிறகு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சல்லிவன் மற்றும் க்ரோம்வெலில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
இந்தியா திரும்பிய பிறகு உச்சநீதிமன்றம் மற்றும் பாம்பே உயர்நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். 1998ம் ஆண்டு பாம்பே உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். நீதிபதியாக பொறுப்பேற்கும் வரை கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஆப் இந்தியாவாக நியமிக்கப்பட்டார்.
முக்கிய பொறுப்புகள்:
2000ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி பாம்பே உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 2013ம் ஆண்டு அக்டோபர் 13-ந் தேதி நியமிக்கப்பட்டார். 2016ம் ஆண்டு மே 13-ந் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2021ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி முதல் உச்சநீதிமன்ற கொலிஜியத்தில் உறுப்பினர் ஆனார்.
இந்தியாவின் மூத்த நீதிபதிகள் 5 பேர் அடங்கிய குழுவான இந்த கொலிஜீயமே நாட்டில் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு தலைமை நீதிபதிகளையும், உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளையும் நியமிக்க பரிந்துரை செய்வது ஆகும். மேலும், பல்வேறு நாடுகளின் சட்ட பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகளையும் எடுத்துள்ளார்.