ஏற்கனவே, திருமணமான நபர் என தெரிய வந்த பிறகும் கூட, குறிப்பிட்ட நபருடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பட்சத்தில் அவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பொய் வாக்குறுதி அளித்திருந்தாலும், அதை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என கேரள உயர் நீதிமன்றம் சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.


33 வயது நபருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி கவுசர் எடப்பாகத், "குற்றம் சாட்டப்பட்டவருக்கும் புகார்தாரருக்கும் இடையிலான உறவு இருவரின் சம்மதத்துடன் இருந்திருப்பதாக தெரிகிறது.






அத்தகைய தம்பதியினருக்கு இடையே உள்ள எந்தவொரு பாலியல் உறவும் காதல் மற்றும் ஆர்வத்தின் காரணமாகவே ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பொய் வாக்குறுதி அளிக்கப்பட்டதால் ஏற்படவில்லை.


4ஆவது பிரதிவாதி மனுதாரருடன் 2010 ஆம் ஆண்டு முதல் உறவு வைத்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டு, அவரது திருமணத்தைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகும் அவர் உறவைத் தொடர்ந்துள்ளார். இது ஒப்புக்கொண்ட உண்மை. எனவே, திருமணம் செய்து கொள்வதாக கூறி பொய் வாக்குறுதி அளிக்கப்பட்டிருப்பதாக சொல்லி இருப்பது இதை மறுதலிக்கிறது. 


இங்கு நிகழ்ந்ததாகக் கூறப்படும் பாலியல் உறவு காதல் மற்றும் ஆர்வத்தேயே வெளிகாட்டுகிறது. பொய் வாக்குறுதியின் காரணமாக நிகழவில்லை" என்றார்.


முந்தைய வழக்குகளை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக அளித்த வாக்குறுதியைத் திரும்பப் பெற்றால், அவர்கள் சம்மதத்துடன் உடலுறவு கொள்வது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376 இன் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றமாகாது. 


ஆனால், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அதன் அடிப்படையில் இருவரின் சம்மதத்துடன் பாலியல் உறவு வைத்திருந்து ஆனால், பின்னர், அதை குறிப்பிட்ட நப்ர நிறைவேற்றவில்லை என்றால் அது பாலியல் வன்கொடுமையாகும் என தெரிவித்தது.


இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 406 (நம்பிக்கை மீறல்), 420 (ஏமாற்றுதல்), 376 (பாலியல் வன்கொடுமை) ஆகியவற்றின் கீழ் தன் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி குற்றம்சாட்டப்பட்டவர் தொடுத்த மனுவின் மீது நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.


ஒன்பது ஆண்டுகளாக, மனுதாரர், புகார்தாரரிடம் பொய்யான திருமண வாக்குறுதியை அளித்து, இந்தியா மற்றும் வெளிநாடுகள் என பல இடங்களுக்கு அழைத்து சென்று அவருடன் பாலியல் உறவு கொண்டார் என்பது அரசுத் தரப்பு குற்றச்சாட்டு.