தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதியை நீக்கி கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகியுள்ளார் தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா.
இந்தியாவை பொறுத்தவரையில், தேர்தலை நடத்தும் பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திடமே உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல், மாநிலங்களவை தேர்தல், மாநில சட்டப்பேரவை தேர்தல் ஆகியவை தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில்தான் நடக்கிறது.
வழக்கில் இருந்து விலகிய தலைமை நீதிபதி:
அதோடு, குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலையும் இந்திய தேர்தல் ஆணையமே நடத்துகிறது. உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில், அந்தந்த மாநில தேர்தல் ஆணையங்களே நடத்துகின்றன. தன்னாட்சி அமைப்பாக இருக்கும் இந்திய தேர்தல் ஆணையம் தற்போது மூன்று பேர் கொண்ட அமைப்பாக இயங்கி வருகிறது.
பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் (அல்லது தனிப்பெரும் எதிர்க்கட்சி தலைவர்), இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் ஆகிய 3 பேர் கொண்ட உயர்நிலை குழு அளிக்கும் பரிந்துரையின்படி, தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால், கடந்தாண்டு, மத்திய பாஜக அரசு இதில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இந்திய தலைமை நீதிபதியை நீக்கும் வகையில் கடந்தாண்டு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது.
நடந்தது என்ன?
தேர்தல் ஆணையர் நியமனத்தில் மத்திய அரசுக்கு சாதகமாக சட்டத்திருத்தம் கொண்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகியுள்ளார் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா. வேறு ஒரு அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கின் விசாரணை, வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் நடந்து வரும் இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்த சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு இடைக்கால உத்தரவிட்டது. இச்சூழலில், சஞ்சீவ் கண்ணா, தலைமை நீதிபதியாகியுள்ள நிலையில், வழக்கில் இருந்து அவர் விலகியுள்ளார்.